சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட நாகேந்திரனுக்கு சிறையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017ஆம் ஆண்டு முதல் பல வழக்குகள் தொடரப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு, சிறுநீரக மாற்றம் செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த ஜனவரி மாதம் குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக சென்றபோது, நாகேந்திரனின் உடல் எடை கூடியதால், சிறுநீரகத்தை பாதிக்கக்கூடும் என எச்சரித்த மருத்துவர்கள், ஏப்ரல் மாதம் சிகிச்சை அளிக்க தேதி குறித்துள்ளனர். ஆனால் அவரை ஏப்ரல் 6ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்க புழல் சிறை கண்காணிப்பாளர் மறுத்துள்ளார்.
இதனால் கணவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க அனுமதிக்க கோரி நாகேந்திரன் மனைவி விசாலாட்சி மே 25 மற்றும் ஜுன் 10ஆம் தேதிகளில் சிறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
Also read... விஜய் சேதுபதியின் மகளுக்கு மோசமான மிரட்டல்: ’பெண்களையும் குழந்தைகளையும் மிரட்டுவதுதான், கோழைகளின் ஆயுதம்’ - கனிமொழி எம்.பி
சிறைக்குள் மிரட்டல் இருப்பதாகவும், துப்பாக்கி முனையில் மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டி புழல் சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமாருக்கு எதிராக செப்டம்பர் 24ஆம் தேதி, உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஆகியோரிடம் விசாலாட்சி புகார் மனு அனுப்பியிருந்தார்.
அந்த புகார் மீது உரிய முறையில் விசாரணை நடத்த டிஐஜி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை நியமிக்க கோரி விசாலாட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டிஜிபி, புழல் சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் இரண்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.