7.5 சதவீத இடஒதுக்கீட்டில் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்காக மறு கலந்தாய்வு நடத்த அனுமதி

7.5 சதவீத இடஒதுக்கீட்டில் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்காக மறு கலந்தாய்வு நடத்த அனுமதி

சென்னை உயர்நீதிமன்றம்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், வழக்கு தொடர்ந்த மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மாநில அரசுக்கு திருப்பி அளிக்கப்பட்ட அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்று கட்டணம் செலுத்த முடியாத அரசு பள்ளி மாணவர்களை சேர்ப்பதற்கான மறு கலந்தாய்வு நடத்த அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில், தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாததால் கடலூரைச் சேர்ந்த மாணவிகள் தர்ஷினி, மற்றும் இலக்கியா ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என நவம்பர் 20ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன் தேதியிட்டு அமல்படுத்த கோரி மாணவிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, காத்திருப்போர் பட்டியலில் உள்ள 60 மாணவர்களுக்கு சேர்க்கை கிடைக்க ஏதுவாக கூடுதல் இடம் உருவாக்க முடியாது எனவும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழகத்தில் இருந்து வழங்கப்பட்ட இடங்களில் 227 இடங்கள் மீண்டும் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 26 இடங்கள் கிடைக்கும் என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து, இந்த இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தும் போது யாருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், மாநில அரசுக்கு திருப்பி அளிக்கப்பட்ட அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நடத்த உள்ள மறுகலந்தாய்வில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் இடம் ஒதுக்கப்பட்ட 60 மாணவர்களுக்கும் அனுமதியளிப்பது என அரசு முடிவு செய்துள்ளதாகவும், இந்த இடங்களுக்கு தகுதி மற்றும் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Also read... 2021-ல் யார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு கவலையில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், வழக்கு தொடர்ந்த மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மாநில அரசுக்கு திருப்பி அளிக்கப்பட்ட அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மறு கலந்தாய்வு நடைமுறையை மேற்கொள்ளவும், மறு கலந்தாய்வில் வழக்கு தொடர்ந்த மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜனவரி 8 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: