கோவை அவினாசி சாலையில் 1,600 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் மேம்பால கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவை, அவினாசி சாலையில், கோல்ட்வின்ஸ் எனும் இடத்தில் இருந்து உப்பிலிபாளையம் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு 1600 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பை எதிர்த்து சசி அட்வர்டைசிங் நிறுவன நிர்வாக இயக்குனர் சுவாமிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்
அதில், குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த அவினாசி சாலையில் எந்த சட்ட நடைமுறைகளையும் பின்பற்றாமல் மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருவதாக புகார் தெரிவித்துள்ளார்.
தனக்கு சொந்தமான நிலத்தை, கையகப்படுத்துவது தொடர்பாக தனக்கு எந்த நோட்டீசும் வழங்கப்படவில்லை என்றும், சமூக தாக்க மதிப்பீடு செய்யப்படவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also read... தி.மு.க அறிக்கை கதாநாயகன்: அ.தி.மு.க அறிக்கை காமெடி வில்லன் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்
நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படவில்லை என்பதால், நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்து, மேம்பால கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி நக்கீரன் அடங்கிய அமர்வு, மேம்பால கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.