Home /News /tamil-nadu /

75-வது சுதந்திர தினத்திலும் ஆங்கிலேய ஆர்டர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது - சென்னை உயர் நீதிமன்றம்

75-வது சுதந்திர தினத்திலும் ஆங்கிலேய ஆர்டர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது - சென்னை உயர் நீதிமன்றம்

 நீதிமன்றம்

நீதிமன்றம்

காவல் துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், சொந்த வாகனங்களில் அரசு முத்திரை போன்ற விவகாரங்கள் குறித்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்து வருகிறார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
    நாட்டின் 75-வது சுதந்திர தினத்திலும் ஆங்கிலேய ஆர்டர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆர்டர்லி முறையை ஒழிக்க எடுத்த நடவடிக்கை குறித்து ஆகஸ்ட் 18க்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

    காவல் துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், சொந்த வாகனங்களில் அரசு முத்திரை போன்ற விவகாரங்கள் குறித்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்து வருகிறார்.

    இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,  19 ஆர்டர்லிக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்தியதால், சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில், தெரிவிக்கப்பட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர் மாநாட்டிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    அப்போது நீதிபதி, 19 ஆர்டர்லிகள் தான் திரும்பப் பெறப்பட்டுள்ளனரா என கேள்வி எழுப்பி, நாம் ராஜா ராணி இல்லை என்றும், நாட்டின் அனைத்து குடிமக்களும் ராஜா, ராணிக்கள் தான் என குறிப்பிட்டதுடன், நாம் அனைவரும் மக்கள் சேவகர்கள் தான் என தெரிவித்தார்.

    வெறும் எச்சரிக்கை மட்டும் போதாது என்றும், நடவடிக்கை அவசியம் எடுக்க வேண்டும் எனவும்,  நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில் ஆங்கிலேய ஆர்டர்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக்கேடானது என்றும் வேதனை தெரிவித்தார்.
    சுதந்திர தினத்துக்கு முன் ஆர்டர்லி முறையை ஒழிக்க நடவடிக்கை எடுத்து  டிஜிபி தனது பெருமையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என நீதிபதி வலியுறுத்தினார்.

    ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரே ஒரு வார்த்தை போதும், ஆனால் அந்த வார்த்தை அரசிடமிருந்தோ, காவல்துறை தலைவரிடமிருந்தோ  வருவதில்லை என நீதிபதி வேதனையை வெளிப்படுத்தினார்.

    Also read... மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது தொடர்பாக ஏபிவிபியின் முன்னாள் தேசிய தலைவர் மீதான வழக்கு ரத்து

    ஆர்டர்லிகளை வைத்திருக்கக் கூடாது என்கிற தமிழக உள்துறை முதன்மை செயலாளாரின் உத்தரவை பின்பற்றவில்லை என்றால், சம்பந்தப்பட்ட ஐ பி எஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறைக்கு உத்தரவிட நேரிடும் என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் எச்சரித்தார்.

    பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,  தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலத்தில் ஆர்டர்லி முறை இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும்  ஆர்டர்லி முறை ஒழிப்பு தொடர்பாக தமிழக உள்துறை  செயலாளர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 18ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Madras High court

    அடுத்த செய்தி