எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் - சிறப்பு நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் - சிறப்பு நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

கோப்புப் படம்

தமிழகம் முழுக்க முன்னாள் மற்றும் தற்போதைய எம்.பி , எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக 370க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் சிறப்பு நீதிமன்றங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளதாக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தில் முன்னாள் மற்றும் தற்போதைய எம்.பி. –எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என, சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் அவற்றை கண்காணிப்பது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கடந்த டிசம்பர் 7 முதல் 23ம் தேதி வரையிலான காலகட்டத்தில் தினமும் 10 வழக்குகள் வீதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, முகாந்திரமற்ற வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதாக, சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர், தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றங்களையே சிறப்பு நீதிமன்றங்களாக செயல்பட அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள போதும், ஏற்கனவே சம்பந்தப்பட்ட செஷன்ஸ் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், எம்பி எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கை விசாரிப்பதில் முன்னேற்றம் இல்லை எனவும், தமிழகம் முழுக்க முன்னாள் மற்றும் தற்போதைய எம்.பி , எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக 370க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் சிறப்பு நீதிமன்றங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளதாக தெரிவித்தார்.

Also read... தமிழகத்தில் நீர் நிலைகளை ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது - அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதைப் பொறுத்து அது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தனர்.

எம்பி – எம்எல்ஏக்கள் மீதான நிலுவை வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க ஒரு முழுமையான செயல் திட்டத்தை வகுக்க வேண்டியுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டுமெனவும், விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட இடைவெளியில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இந்த விவகாரத்தை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் எனவும் கூறி, வழக்கு விசாரணையை வரும் 11ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: