தமிழகத்தில் குழந்தைகள் கடத்தலை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? நீதிமன்றம் கேள்வி

மாதிரி படம்

தமிழகத்தில் குழந்தைகள் கடத்தலை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து உள்துறை மற்றும் சமூக நலத்துறை முதன்மை செயலாளர்கள் ஜனவரி 25 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னையில் பாரிமுனை பகுதியில் தெருவோரம் தூங்கிய 8 மாத குழந்தை ராகேஷ் மற்றும் வால்டாக்ஸ் சாலையோரம் தூங்கிய சரண்யாவும் கடத்தப்பட்டனர். கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கக்கோரி எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் நிர்மல் ஆட்கொனர்வு மனுத்தாக்கல் செய்தார். ஏற்கனவே இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், குழந்தை கடத்தலை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, குழந்தை கடத்தல் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், குழந்தைகள் கடத்தலை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டதாக வேதனை தெரிவித்தனர்.

தமிழகத்தில் சிறார் நீதிச்சட்ட விதிகளை பின்பற்றாமல் செயல்படும் சிறார் காப்பகங்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், லாப நோக்கில் செயல்படும் இது போன்ற காப்பகங்களால் தான் ஆதரவற்ற குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.

கொரோனா பேரிடர் காலத்தில் இதுபோன்ற காப்பகங்களில் தங்கியிருந்த ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் சிறார்களின் நலனுக்காக ஒரு பொது நல வழக்கு கூட தொடரப்படவில்லை என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

தமிழக அரசும் அவர்கள் குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை என கவலை தெரிவித்த நீதிபதிகள், அவர்கள் கடவுளின் பிள்ளைகள் என்பதால் தான் அவர்கள் மீது யாரும் அக்கறை கொள்ளவில்லையா எனவும் சந்தேகம் எழுப்பினர்.

Also read... என்னது தியேட்டர்ல போன் நம்பர் கேக்குறாங்களா? எரிச்சலடையும் ரசிகர்கள்பல டிராபிக் சிக்னல்களில் ஏராளமான குழந்தைகளை வைத்து, வட மாநில பெண்கள் பிச்சை எடுப்பது அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அவர்கள் வைத்திருப்பது கடத்தப்பட்ட குழந்தைகளா ? அவர்களுக்கு மயக்க மருந்து செலுத்தப்படுகிறதா என்பது குறித்து ஏன் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்வதில்லை எனவும் கேள்வி எழுப்பினர்.

காலியாக உள்ள மாநில குழந்தைகள் நல ஆணைய பதவிகள் நிரப்பப்படாததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், 2016 ஆம் ஆண்டு முதல் பல உத்தரவுகள் பிறப்பித்தும் குழந்தை கடத்தல் வழக்குகளுகளை காவல்துறையினர் முறையாக கையாளவில்லை எனவும் கருத்து தெரிவித்தனர்.

மேலும், தமிழகத்தில் குழந்தை கடத்தல் தொடர்பாக பெறப்பட்ட புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனவரி 25 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உள்துறை மற்றும் சமூக நலத்துறை முதன்மை செயலாளர்கள், கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் உள்ளிட்டோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Published by:Vinothini Aandisamy
First published: