அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க., வன்னியர் சங்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு: மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க., வன்னியர் சங்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு: மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

பாமக போராட்டம் (கோப்புப் படம்)

மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகள், தெற்கு ரயில்வே, வன்னியர் சங்கம், பாமக ஆகியவற்றுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி டிசம்பர் முதல் வாரம் போராட்டத்தில் ஈடுபட்ட வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மக்கள் மன்றத்தின் தலைவர் வாராகி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், பொங்கியப்பன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சண்முகம் ஆஜராகி 4 நாட்கள் போராட்டத்துடன் முடிந்துவிடவில்லை என்றும், கிராம நிர்வாக அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தப்படும் என வன்னியர் சங்கம் மற்றும் பாமக திட்டமிட்டுள்ளதாகவும், ஏற்கனவே போராட்டத்தில் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக காவல்துறை வழக்கு மட்டுமே பதிந்துள்ளதாகவும், முன்னெச்சரிக்கை கைது ஏதும் செய்யவில்லை எனவும் வாதிட்டார்.

நீதிபதிகள் நியமனத்திலும் இடஒதுக்கீடு கோரி இரண்டு நாட்களுக்கு முன்னர்கூட உயர் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்ததாகவும் வாராகி தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது, நீதிபதிகள், குற்ற விசாரணை நடைமுறைப்படி முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கையில் ஈடுபட காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளதாகவும், பொது சொத்துக்களை பாதுகாப்பதற்காக தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

Also read... வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் - மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

அவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய சரியான தருணம் இது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் காவல்துறை செயல்படும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த நீதிபதிகள், போராட்டத்தின் போது ரயில் மீது கல்லெறிந்த சம்பவம் நடைபெற்றுள்ளதால், வழக்கில் தெற்கு ரயில்வே பொது மேலாளரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்தனர்.

பின்னர் மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகள், தெற்கு ரயில்வே, வன்னியர் சங்கம், பாமக ஆகியவற்றுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: