ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் மீது வழக்கு பதிவுசெய்யக்கோரிய வழக்கு.. இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்குமாறு நீதிமன்றம் பரிந்துரை..

முன்னாள் நீதிபதி கர்ணன்

பார் கவுன்சில் தரப்பில், நீதிபதி கர்ணனை கைது செய்ய முடியாவிட்டாலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகும், அவரது வீடியோக்களை அப்லோட் செய்யும் நபரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நீதிபதிகளை இழிவாக விமர்சித்து வீடியோ வெளியிட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் மீது வழக்கு பதிய கோரிய வழக்கை இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.

சென்னை மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றங்களில் பணியாற்றிய ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன், உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும், நீதிமன்ற ஊழியர்களையும் தகாத வார்த்தைகளால் விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டார்.

இதுதொடர்பாக அவர் மீது நடவடிக்கை கோரியும், அவர் வெளியிட்டுள்ள வீடியோக்களை நீக்கும்படி சமூக வலைதளங்களுக்கு உத்தரவிடக் கோரியும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு, நீதிபதி கர்ணனின் செயல்பாடு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின்படி தண்டனைக்குரிய குற்றம் என தெரிவித்ததுடன், மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை அவரின் பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் நீக்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் மீது நவம்பர் 6-ஆம் தேதி அளித்த புகாரில் வழக்கு பதியக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தது.

Also read... மீதமுள்ள 35 % கல்விக் கட்டணத்தை வசூலித்துக் கொள்ள தனியார் பள்ளிகளுக்கு உயர் நீதிமன்றம் அனுமதிஇந்த மனு இன்று நீதிபதி ரவீந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இதே விவகாரம் தொடர்பான வழக்கு இரு நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் இருப்பதால் அதனுடன் இணைத்து விசாரிக்க பரிந்துரைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

பார் கவுன்சில் தரப்பில், நீதிபதி கர்ணனை கைது செய்ய முடியாவிட்டாலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகும், அவரது வீடியோக்களை அப்லோட் செய்யும் நபரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். காவல்துறை தரப்பில், கர்ணன் மீது வழக்கறிஞர் தேவிகா என்பவர் அளித்த புகாரில் மூன்று பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த மனுவையும் இரு நீதிபதிகள் அமர்வில் உள்ள வழக்குடன் இணைத்து விசாரிக்க பரிந்துரைத்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published: