ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

காவல் துறை தூய்மைப் பணியாளர்களின் ஊதியம் தொடர்பான உத்தரவு ரத்து - சென்னை உயர் நீதிமன்றம்

காவல் துறை தூய்மைப் பணியாளர்களின் ஊதியம் தொடர்பான உத்தரவு ரத்து - சென்னை உயர் நீதிமன்றம்

மாதிரி படம்

மாதிரி படம்

தமிழக காவல் துறையில் சிறப்பு காலமுறை ஊதியத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட 558 தூய்மைப் பணியாளர்களுக்கும், கல்வித்துறை தூய்மைப்பணியாளர்களுக்கு இணையாக தங்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :

கல்வித்துறை தூய்மைப் பணியாளர்களுக்கு இணையாக காவல் துறை தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக காவல் துறையில் சிறப்பு காலமுறை ஊதியத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட 558 தூய்மைப் பணியாளர்களுக்கும், கல்வித்துறை தூய்மைப்பணியாளர்களுக்கு இணையாக தங்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, கல்வித்துறை தூய்மைப் பணியாளர்களுக்கு இணையாக காவல் துறை தூய்மைப் பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக உள்துறை, டிஜிபி உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு, நீதிபதி வைத்தியநாதன் மற்றும் விஜயகுமார் அமர்வு விசாரித்தது.

புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடங்களில் சிறப்பு காலமுறை ஊதியத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட பணியாளர்கள், பிற துறை பணியாளர்களுக்கு இணையாக ஊதியம் கோர முடியாது எனவும், எந்த பாரபட்சமும் காட்டப்படவில்லை எனவும் அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

Also read... கோவையில் பாலியல் புகாருக்கு உள்ளான அரசு பள்ளி ஆசிரியர் கைது!

ஒரே பிரிவைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களுக்கு, சமமான பணி; சம ஊதியம் என்ற அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் என பணியாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், காவல் துறை தூய்மைப் பணியாளர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு, அந்தந்த மாவட்ட அதிகாரிகளால் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தற்காலிக அடிப்படையில் சிறப்பு காலமுறை ஊதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Also read... மீண்டும் விஜயகாந்த் திரைப்படங்களில் நடிக்க போகிறாரா? பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்!

மாநில அளவில் விண்ணப்பங்கள் வரவேற்று தேர்வு செய்யப்படாமல், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சம வேலை; சம ஊதியம் கோர முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madras High court