நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பட்டியலினத்தவர்களுக்கும், பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பித்த அரசாணையை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியலின, பழங்குயினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி ஜனவரி 17ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த அரசாணையை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக செயலாளர் சத்தியமூர்த்தி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில், மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் மூன்று மாநகராட்சிகளின் மேயர் பதவிகள், பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பழங்குடியினத்தவர்களுக்கு எந்த இடமும் ஒதுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, 138 நகராட்சிகளில் 20 நகராட்சி தலைவர் பதவிகள் பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பழங்குடியினருக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
490 பேரூராட்சிகளில் 85 பேரூராட்சிகள் பட்டியலினத்தவர்களுக்கும், 3 இடங்கள் பழங்குடியினத்தவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த சட்டத்தின் படியும் அல்லாமல், விதிகளின் அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால் அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அரசாணையை ரத்து செய்து புதிய அரசாணையை வெளியிட உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞரும், சென்னை மாநகராட்சி தரப்பு வழக்கறிஞரும், 1994ம் ஆண்டு சட்டத்தின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக தெரிவித்தனர்.
Also read... குடியரசு தலைவராக உங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறதே? பத்திரிகையாளரின் கேள்விக்கு கையெடுத்து கும்பிட்ட தமிழிசை!
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 1994ம் ஆண்டு சட்டத்தின் கீழ் மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இட ஒதுக்கீடு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.