நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால், ஆருத்ரா கோல்ட் நிறுவன இயக்குனர்களின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தில் 1,678 கோடி ரூபாய் வரை முதலீடு செய்தவர்களுக்கு மாதந்தோறும் 10 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறிய நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் வட்டியை தராமல் மோசடியில் ஈடுபட்டதாக, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தானாக முன்வந்து ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி நிர்வாக இயக்குனர் ராஜசேகர், ஜெய்கமல், ஜெயக்கொடி, நவீன், மாலதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், வங்கி கணக்குகள் முடக்கத்தால் தான் பணத்தை திருப்பித்தர இயவில்லை என்றும், திருப்பித் தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து 5 பேரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்த நீதிபதி இளந்திரையன், டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பி அளித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட வருவாய் அலுவலருக்கு உத்தரவிட்டிருந்தார்.
அனைத்து ஆருத்ரா நிறுவனங்களின் இயக்குனர்கள், கிளை பொறுப்பாளர்கள், முகவர்கள் ஆகியோர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தினம்தோறும் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி முதலீட்டாளர்களின் தகவல்களோடு ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார்.
மேலும், டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்கும் வகையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் மனுதாரர்கள் அனைவரும் இணைந்து 50 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், விண்ணப்பித்தவர்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்வதற்காக நிறுவன இயக்குனர்கள் காவல்துறை முன்பு ஆஜராகவில்லை எனவும் 50 கோடி ரூபாய் பணத்தையும் செலுத்தவில்லை எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து முன் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்திருந்தார்.
Also read... “சமரசம்..!” இறங்கி வந்த ஓபிஎஸ்.. விடாப்பிடியாக இருக்கும் ஈபிஎஸ்.. 3 வாரத்தில் வழக்கை முடிக்க நீதிமன்றம் உத்தரவு
இந்த மனுக்கள் மீது இன்று தீர்ப்பளித்த நீதிபதி இளந்திரையன், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால் ஆருத்ரா கோல்ட் நிறுவன இயக்குனர்களின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திரும்ப அளிப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும், அதன்பின்னர் 5 லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்தவர்களுக்கு அடுத்தகட்டமாக முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.