அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதிமுக-வின் செய்தித் தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்கி ஜூன் 14ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
அந்த அறிக்கையில் கூறப்பட்ட காரணங்கள் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும், இருவரையும் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரி புகழேந்தி, சென்னை எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இருவரும் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தங்களுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
நீதிபதி நிர்மல்குமார் முன்பு இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, அதிமுகஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தரப்பில், தவறு செய்த ஒருவர் நீக்கப்பட்டது குறித்து உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டியது கடமை என்ற அடிப்படையில் அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், அவதூறுக்கு முகாந்திரம் இல்லை என வாதிடப்பட்டது. கட்சியின் விதிகளை பின்பற்றாத உறுப்பினர் மீதுஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கட்சியில் இருந்து நீக்கவும் தலைமைக்கு முழு அதிகாரம் உள்ளதெனவும் வாதிடப்பட்டது.
புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத், தன்னிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை எனவும்,பதில் அளிக்க வாய்ப்பு வழங்கப்படாமல், காரணமின்றி நீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
Also read... கூலி தொழில் செய்யும் கணவருக்கு துணையாக மாட்டு வண்டி ஓட்டும் 65 வயது மூதாட்டி
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி நிர்மல்குமார் கட்சியிலிருந்து நீக்கி அறிவிப்பில் அவதூறு பரப்பும் வகையில் ஏதும் இடம்பெறவில்லை என்பதால், அதன் அடிப்படையில் ஓ.பன்னீரசெல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.