நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் கோரிய மனு குறித்து காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்துவந்தது.
முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும மகேஷ் குமார் புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பான வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மார்ச் 11 வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது ஜாமீன் மனுவை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில், தனது மருமகன் நவீன்குமாரும், அவரது சகோதரர் மகேஷும் பங்குதாரர்களாக உள்ள மீன்பிடி வலை தயாரிக்கும் நிறுவன நிர்வாகத்தில் ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான சிவில் வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, எவ்வித தொடர்பும் இல்லாத தான் கைது செய்யப்பட்டிருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுங்கட்சியை சேர்ந்த மகேஷின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தன்னை வழக்கில் தவறாக இணைத்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Also read... மதுபோதையில் கிரானைட் கம்பெனியில் வடமாநில தொழிலாளி கொலை
முன்னாள் அமைச்சரான தனது நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் நோக்குடன் பதிவான வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. அதேசமயம் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என புகார்தாரர் மகேஷ்குமார் தரப்பில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக அவரது வழக்கறிஞர் ஆனந்தன் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை மார்ச் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.