புனித ஹஜ் பயணம் செய்வோருக்கான புறப்பாட்டு தலமாக சென்னையை மீண்டும் அறிவிக்க கோரிய தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்கும்படி, ஹஜ் கமிட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் வசதிக்காக சென்னை, கொச்சி, ஹைதராபாத் உள்பட 21 இடங்கள் புறப்பாட்டு தலங்களாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 21 புறப்பாட்டு தலங்களை 10 ஆக குறைத்து இந்திய ஹஜ் குழு அறிவித்துள்ளது. இதில் சென்னை நீக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையை மீண்டும் புறப்பாட்டு தலங்கள் பட்டியலில் சேர்க்க கோரி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமானில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வோர் கொச்சிக்கு பயணிக்க வேண்டிய நிலை உள்ளதாகவும், இது அவர்களுக்கு பெருத்த அசவுகர்யத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 34 ஆண்டுகளாக சென்னை விமான நிலையம் ஹஜ் பயணிகளின் புறப்பாட்டு தலமாக இருந்து வந்தது எனவும், 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பயணிகள் சென்னையில் இருந்து புனித பயணம் மேற்கொள்வதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
Also read... இஸ்லாமிய மாணவர்கள் ரமலான் நோன்பு இருக்கக்கூடாது என ஆசிரியர்கள் அழுத்தம்? - கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு சம்பவம்..
சென்னை விமான நிலையத்தையும் புறப்பாட்டு தலமாக அறிவிக்க கோரி தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதை ஹஜ் கமிட்டி பரிசீலித்து வருவதாகவும் ஹஜ் கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலித்து விரைந்து முடிவெடுக்கும்படி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.