நதிகளின் நீரின் தரத்தை பாதுகாப்பதில் அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

கோப்புப் படம்

காவிரி நதியின் துணை நதிகளில் ஒன்றான அமராவதி நதி, அருகில் உள்ள தொழிற்சாலைகளால் மாசடைவதாக கூறி, தனசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகள் மூலம் நதிகள் மாசடைவதை தடுப்பது குறித்து ஆலோசனைகள் வழங்க நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதியின் துணை நதிகளில் ஒன்றான அமராவதி நதி, அருகில் உள்ள தொழிற்சாலைகளால் மாசடைவதாக கூறி, தனசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தொழிற்சாலைகளால் மாசடைந்த அமராவதி நதி நீர், குடிநீராகவோ, விவசாயத்துக்கோ பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, நதிகள் மாசடைவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை என தெரிவித்தது.

மேலும், நதிகளில் தொழிற்சாலைகள், கழிவுகள் கொட்டுவது, கழிவுநீர் வெளியேற்றுவதை தடுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், கடைமடை மக்களும் நதி நீரைப்பயன்படுத்தும் வகையில், அதன் தரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Also read... இரவு ஊரடங்கு அமலாவதால் பகலிலேயே இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகள் -  கோவையில் வெறிச்சோடிய பேருந்துகள்!

நதி நீர் மாசடையும் போது, நிலத்தடி நீரும் பயன்படுத்த தகுதியற்றதாகி விடுவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், நீரின் தரத்தை பாதுகாப்பதில் அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தினர்.

கூவம் நதி மீது கட்டப்பட்டுள்ள நேப்பியர் பாலத்தின் மீது ஏசி காரில் செல்லும்போது கூட, துர்நாற்றம் வீசுவதாகவும் தலைமை நீதிபதி வேதனை தெரிவித்தார். தமிழகம் முழுவதும் உள்ள நதிகளில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்வது குறித்தும், கழிவுநீர் வெளியேற்றுவதை எப்படி தடுப்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்குவதற்காக நிபுணர் குழுவை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: