ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நீட் பாதிப்பு ஆய்வுக்குழுவுக்கு எதிரான மனு - மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

நீட் பாதிப்பு ஆய்வுக்குழுவுக்கு எதிரான மனு - மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மாதிரி படம்

மாதிரி படம்

நீட் தேர்வின் தாக்கம் குறித்தும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் குறைகளை கேட்க வேண்டும் என்ற அடிப்படையில் குழு அமைக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் குழுவுக்கு தடைக்கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக பா.ஜ. பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வழக்கு கடந்த முறை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது,

உச்ச நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக ஏ.கே.ராஜன் குழு அமைக்கப்பட்டுள்ளதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என கரு.நாகராஜன் தரப்பில் வாதிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, மனு தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இதையடுத்து, இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும், திராவிடர் கழக தலைவர் வீரமணி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோரும் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுக்களில், நீட் தேர்வின் சாதக, பாதகங்களை ஆராய குழு மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழு இன்னும் தனது அறிக்கையை அரசுக்கு அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Also read... கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி சென்னையில் தொடங்கியது!

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும், இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், தமிழக அரசு தரப்பில் பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், குழுவின் அறிக்கை, அரசின் நடவடிக்கைகள் குறித்து யூகத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், அரசியல் கட்சியை சேர்ந்த அவர் இந்த விவகாரத்தில் பொது நலன் எப்படி பாதிக்கப்பட்டது என்பதை தெரிவிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கரு.நாகராஜன் ஒரு மாணவரோ, பெற்றோரோ இல்லை என்றும், அரசியல் கட்சியின் நிர்வாகியான அவர் விளம்பரத்திற்காக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நீட் தேர்வின் தாக்கம் குறித்தும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் குறைகளை கேட்க வேண்டும் என்ற அடிப்படையில் குழு அமைக்கப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

நீதிபதி ஏ.கே.ராஜன் குழு நியமனத்தில் அரசியல் சாசனத்தின் எந்த அடிப்படை உரிமையும் மீறப்படவில்லை என்றும், மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டே குழு நியமிக்கப்பட்டு உள்ளதாக திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்பில் தற்போதைய நிலையை ஆராயவும், அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பை உறுதிசெய்யவும் ஒரு ஆய்வு என்பது அவசியமாவதால், இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பிலும் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், வழக்கில் விரிவான விசாரணை அவசியம் என்பதால் வழக்கை ஜூலை 13 ஆம் தேதி பிற்பகல் 2:15 மணிக்கு தள்ளி வைத்தனர்.

அதே நேரத்தில், இந்த வழக்கில் அனைத்து இடையீட்டு மனுக்களை அனுமதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றாலும் இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி அனைவரின் வாதங்கள் கேட்டு உத்தரவு பிறப்பிக்கபடும் என தெரிவித்த நீதிபதிகள் மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madras High court, Neet Exam