இரும்பு கம்பிகளை கூடுதல் விலைக்கு விற்பது தொடர்பாக 9 நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி வழக்கு...!

சென்னை உயர் நீதிமன்றம்

கட்டுமான துறையில் உள்ள ஒப்பந்ததாரர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் பாதிக்கப்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, இரும்பு கம்பிகளை கூடுதல் விலைக்கு விற்பது தொடர்பாக இரும்பு கம்பி உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சிபிஐ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயம்புத்தூர் ஒப்பந்ததாரர்கள் சங்கம் தொடர்ந்துள்ள வழக்கில், கடந்த 6 மாதங்களாக இரும்புக் கம்பிகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், கம்பிகள் கிடைப்பதில் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருவதாகவும், அதை காரணம்காட்டி அதிக விலைக்கு கம்பிகளை விற்பனை செய்துவருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

தங்களுக்குள் ஒரு அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு, டாடா, ஜெ.எஸ்.டபிள்யூ, செயில், விசாகே, திருமலா, காமாட்சி, அக்னி, இந்த்ரோலா, கிஸ்கோ ஆகிய இரும்புக் கம்பி தயாரிக்கும் நிறுவனங்களும் கூடுதல் விலைக்கு கம்பிகளை விற்று சட்டவிரோத லாபம் ஈட்டி வருவதாக குற்றம்சாட்டியுள்ளது.

Also read... தேர்தலில் கேட்ட சின்னம் ஒதுக்காததால் ஆவடி தொகுதி தேர்தலை தள்ளிவைக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு...!

இதனால் கட்டுமான துறையில் உள்ள ஒப்பந்ததாரர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் பாதிக்கப்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய சிபிஐ-யிடம் மார்ச் 6ஆம் தேதி மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தங்கள் புகார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, 2 வாரத்தில் பதிலளிக்கும்படி, சிபிஐ-க்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்துள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: