குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஜாமீன் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்துள்ள மனு குறித்து சென்னை காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆபாசமாக பேசிக்கொண்டு பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் விளையாடி சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை தவறான வழியில் கொண்டு சென்றதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், பப்ஜி மதனுக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் தலைமறைவானார்.
பெண்களை ஆபாசமாக சித்தரித்தல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் பதிவான வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 18 ம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீது ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக் கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர், ஜூலை 5 ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்நிலையில், ஜாமீன் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நேற்று முன் தினம் தள்ளுபடி செயதது. இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பப்ஜி மதன் மனுத்தாக்கல் செய்தார்.
Also read... போலி சாதிச்சான்று அளித்த அறிவியல் உதவியாளருக்கு கட்டாய ஓய்வு - நீதிமன்றம் உத்தரவு
இந்த மனு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மதன் தரப்பில், கடந்த 10 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், தன் மீதான குண்டர் சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால், ஜாமீன் வழங்க வேண்டுமென வாதிடப்பட்டது.
இதையடுத்து மதனின் ஜாமீன் மனு குறித்து சைபர் கிரைம் பிரிவு காவல்துறை 10 நாட்களில் பதில் மனு தாக்கல் செய்ய உத்ததவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.