ஐஜி மீது பாலியல் புகார்: நடவடிக்கை எடுக்காதது துரதிருஷ்டவசமானது - நீதிபதி அதிருப்தி!

சென்னை உயர்நீதிமன்றம்.

குரூப் 1 அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இதுபோன்ற வழக்குகளை கையாள தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் போன்ற மூத்த ஐ ஏ எஸ் அல்லது ஐ பி எஸ் அதிகாரிகள் தலைமையில் உயர் மட்டக் குழுவை ஏன் அமைக்கக் கூடாது? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி முருகனுக்கு எதிராக பெண் அதிகாரி அளித்த பாலியல் புகார் மீது ஆறு மாதங்களாக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது துரதிருஷ்டவசமானது என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

    லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி,யாக உள்ள முருகன் மீது, அதே பிரிவில் பணியாற்றும் பெண் எஸ். பி. ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பாலியல் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரிக்க கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா குழுவை அமைத்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

    புகாரை விசாரித்த விசாகா குழு, சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த பரிந்துரைத்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்த ஐ.ஜி. முருகன், லஞ்ச ஒழிப்புத்துறையிலேயே விசாரணைக்குழு உள்ளதாகவும், சிபிசிஐடி விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

    இதேபோல், முருகனை பணியிட மாற்றம் செய்யக் கோரி, புகார் தெரிவித்த பெண் எஸ்.பி.யும் மனுத் தாக்கல் செய்தார்.

    இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், புகார் அளித்து ஆறு மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது துரதிருஷ்டவசமானது என அதிருப்தி தெரிவித்தார்.

    மேலும், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை அணுக தடுப்பது என்ன எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, சிபிசிஐடி போலீசில் மீண்டும் புகார் அளிக்க அறிவுறுத்தினார்.

    குரூப் 1 அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இதுபோன்ற வழக்குகளை கையாள தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் போன்ற மூத்த ஐ ஏ எஸ் அல்லது ஐ பி எஸ் அதிகாரிகள் தலைமையில் உயர் மட்டக் குழுவை ஏன் அமைக்கக் கூடாது என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கின் தீர்ப்பை நாளை வழங்குவதாக அறிவித்தார்.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published: