கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது மக்களுக்காக தானே தவிர, தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக இருக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை, கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்காக 1053 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக, 2020-21ம் ஆண்டுக்கான கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையில், மூன்றில் இரண்டு பகுதியான 702 கோடி ரூபாய், ஊரக பகுதிகளுக்கான முன்னுரிமை திட்ட நிதியத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் ஊரக பகுதிகளுக்கான முன்னுரிமை திட்ட நிதியத்தில் இருந்து அமைச்சர் தங்கமணியின் தொகுதியான குமாரபாளையம் தொகுதிக்கு மட்டும் 20,61,20,000 ரூபாய், சாலை அமைப்பது உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டி, நாமக்கல் மாவட்டம், அனிமூர் பஞ்சாயத்து தலைவர் தாமரைச் செல்வன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில், அமைச்சர் தங்கமணியின் தொகுதி உள்பட மூன்று தொகுதிகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற தொகுதிகளுக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த நிதியின் கீழ் பணிகள் துவங்குவதற்கு டெண்டர்கள் கோரப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நெருங்கும் நிலையில், அமைச்சர் தொகுதி உள்ளிட்ட மூன்று தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்த உத்தரவு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.
Also read... சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 22 பேர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்...!
மாவட்ட ஆட்சியர் தான் நிதி ஒதுக்கீடு செய்வதாகவும், அமைச்சர் அல்ல எனவும் தெரிவித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், மனுவுக்கு நாளை விளக்கமளிப்பதாக தெரிவித்தார்.
அரசுத்தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று, விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், ஊரக வளர்ச்சிக்கான, ஊரக பகுதிகளுக்கான முன்னுரிமை திட்ட நிதியை சமமாக பகிர்ந்தளிக்க வேண்டும் எனவும், நிதி ஒதுக்கீடு என்பது மக்களுக்காகத் தான் இருக்க வேண்டுமே தவிர, தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக இருக்கக் கூடாது எனவும் தெரிவித்தனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.