காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு: ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு மீண்டும் தேர்தல்?

மாதவ ராவ்

காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைந்ததால் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

  • Share this:
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாதவராவ் போட்டியிட்டார்.

அவர், 1987-ம் ஆண்டு தமிழ்நாடு தேசிய காங்கிரஸ் மாணவரணி துணைத் தலைவர், தேசிய காங்கிரஸ் இளைஞரணிச் செயலாளர், தேசிய காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் குழு ஆலோசகர், சட்ட ஆலோசனைக் குழு துணைச் செயலாளர் உள்ளிட்ட பதவிவகித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் பாதிப்பின்போதே அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. நுரையீரல் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாதவராவ் சார்பாக அவருடைய மகள்தான் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தேர்தலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் 73.03 சதவீத வாக்குகள் பதிவாயின. தேர்தல் முடிவு தெரியுமுன்னே மாதவராவ் மறைந்ததால் இடைத்தேர்தல் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு அவர் வெற்றி பெற்றால், அந்தத் தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக மற்றக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் இடைத்தேர்தலுக்கு வாய்ப்பில்லை.

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியை பொறுத்தவரை கடந்த 11 தேர்தலிகளில் அ.தி.மு.க 6முறை, தி.மு.க இரண்டு முறை, இந்திய கம்யூனிஸ்ட் ஒருமுறை, சுயேட்சை ஒருமுறை வென்றுள்ளது. 2021 ல் அ.தி.மு.க சார்பில் மான்ராஜ் என்பவர் களத்தில் உள்ளார்.

கடந்த 1991-இல் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராஜீவ் காந்தி, அந்தத் தொகுதியில் தேர்தல் முடிந்த பிறகு கொலை செய்யப்பட்டார். ஆனால் வாக்கு எண்ணிக்கையில் ராஜீவ் காந்தி வெற்றி பெற்றார். இதையடுத்து அந்தத் தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடந்தது குறிப்பிடத்தக்கது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: