தமிழகம் மட்டுமல்ல, மொத்தம் 7 மாநிலங்களில் கைவரிசை... அம்பலமாகும் ஹரி நாடார் மோசடி

ஹரி நாடார்

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிநாடாரிடம் இருந்து 4 கிலோ தங்கம் மற்றும் 8 லட்சத்து 76 ஆயிரம் ரூபாயைப் பெங்களூரு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

 • Share this:
  பெங்களூருவைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் சாஸ்திரி; தொழிலதிபரான இவர் பனங்காட்டுப் படை கட்சியின் நிறுவனர் தலைவரான ஹரிநாடார், தனக்கு வங்கியில் பல கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாகக் கூறி 16 கோடி ரூபாயை பறித்து மோசடி செய்ததாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்

  இதுகுறி்த்து மோசடி வழக்குப் பதிவு செய்த போலீசார், ஹரிநாடாரைத் தேடி வந்தனர். இதற்கிடையே, சட்டமன்றத் தேர்தலில் 44 தொகுதிகளில் தனது பனங்காட்டுப் படை கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்திய ஹரிநாடார், ஆலங்குளம் தொகுதியில் தானும் போட்டியிட்டார். ஒவ்வொரு தொகுதிக்கும் நடிகர் கமலஹாசனைப் போல ஹெலிகாப்டரில் பறந்து பறந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் ஆலங்குளம் தொகுதியில், 37 ஆயிரம் வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்

  தேர்தல் களேபரம் முடிந்த நிலையில் ஓய்வெடுப்பதற்காக கேரள மாநிலம் சென்ற அவரையும் அவரது நண்பர் கேரளாவைச் சேர்ந்த ரஞ்சித் பணிக்கரையும் கொல்லம் நகரில் வைத்து பெங்களூரு போலீசார் புதன்கிழமை கைது செய்தனர். உடனடியாக இருவரையும் பெங்களூரு விஜயநகர காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹரிநாடார், ரஞ்சித் பணிக்கர் மற்றும் இன்னும் சிலர் அடங்கிய கும்பல், வெங்கட்ராமன் சாஸ்திரியிடம், வங்கியில் 6 சதவீத வட்டியில் 360 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக ஆசை காட்டியுள்ளனர்

  இதுகுறித்து கேரளாவில் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தொழிலதிபருடன் ஹரிநாடார் கும்பல் சந்திப்பு நடத்தியுள்ளது. அப்போது, போலி வரைவோலைகள் உள்ளிட்ட ஆவணங்களைக் காண்பித்து வங்கிக் கடன் தயாராகி விட்டதாகவும். அதற்கான சேவைக் கட்டணமாக மொத்தத் தொகையில் 2 சதவீதமாக 7 கோடியே 20 லட்சம் ரூபாய் வேண்டும் என்றும் கூறி பணத்தை பறித்துள்ளனர். பின்னர் வங்கிக் கடனும் வாங்கித் தரவில்லை; வாங்கிய பணத்தையும் கொடுக்கவில்லை. வெங்கட்ராமன் சாஸ்திரி கொடுத்த பணத்தைக் கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

  ஹரிநாடார் தலைமையிலான கும்பல், தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் மிகக் குறைந்த வட்டியில் கோடிக்கணக்கான ரூபாய் வங்கிக் கடன் வாங்கித் தருவதாக தொழிலதிபர்களிடம் கைவரிசை காட்டியுள்ளதாக பெங்களூரு போலீசார் தெரிவித்துள்ளனர். போலி வரைவோலைகளைக் காண்பித்து கோடிக்கணக்கான ரூபாயைப் பறித்துள்ளனர்/

  ஹரிநாடாரிடம் இருந்து மூவாயிரத்து 893 கிராம் எடையுள்ள 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், 8 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், ஒரு கார் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல் ரஞ்சித் பணிக்கரிடம் இருந்து 140 கிராம் எடையுள்ள 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், வைர மோதிரங்கள், 96 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்னள.

  மேலும் அவரது வங்கிக் கணக்கில் இருந்த 36 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் முடக்கப்பட்டுள்ளது. இருவர் மீதும் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஹரிநாடார் வங்கிக் கணக்கில் பரிவர்த்தனை செய்யப்பட்ட பணம் எவ்வளவு என்பது குறி்த்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

  இந்த வழக்கில் தொடர்புள்ள மேலும் பலர் தலைமறைவாக இருப்பதால் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்
  Published by:Vijay R
  First published: