பெங்களூரு தொழிலதிபரிடம் ரூ.15 கோடி மோசடி: கேரளாவிலிருந்த ஹரி நாடாரை கர்நாடக காவல்துறை கைது செய்தது எப்படி?

ஹெலிகாப்டரில் பறந்துவந்த ஹரி நாடார்

மோசடி வழக்கில் நடமாடும் நகைக்கடை ஹரி நாடாரை பெங்களூரு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  • Share this:
நெல்லை மாவட்டம் மேலஇலந்தைக் குலத்தை சேர்ந்தவர் ஹரி நாடார். கழுத்து, கைகள் என மூன்றரை கிலோ தங்க நகைகளை எந்த நேரமும் அணிந்திருப்பார். இதனால் அவரை பொதுமக்கள் நடமாடும் நகைக்கடை என வர்ணித்தனர். நகை மீது எனக்கு தீராத மோகம் இருப்பதால் இதுபோன்று நகைகளை அணிந்து இருப்பதாக அவர் பலமுறை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பனங்காட்டு படை கட்சி சார்பில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டார். இளைஞர் பட்டாளம், ஹெலிகாப்டரில் வந்து பிரச்சாரம் என அவரது தேர்தல் பிரச்சாரம் ஹைடெக்காக இருந்தது. ஹெல்மெட் சின்னத்தில் போட்டியிட்ட அவருக்கு தேர்தல் பிரச்சாரத்தின் போது பல்வேறு கிராமங்களில் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதிகபட்சமாக  20 ஆயிரம் வாக்குகளை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 37 ஆயிரம் வாக்குகளை பெற்று திமுக, அதிமுக கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்தினார். திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா சுமார் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர். இவர் வாக்குகளைப் பிரித்ததால் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த தொகுதியில் தோல்வியடைய நேரிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்ட அவர் வாக்கு எண்ணிக்கையின் போது கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் கேரள மாநிலம் கோவளம் அருகே உள்ள பூவார் பகுதியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை கர்நாடக போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

அவருடைய நகைகள், பல லட்சம் பணம், மூன்று கார்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.

வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான பணத்தை பல்வேறு நபர்களுக்கு கடனாகப் பெற்றுக் கொடுக்கும் தொழிலை ஹரி நாடார் செய்து வருவதாக கூறப்படுகிறது. அதற்காக கடன் தொகையில் 10 சதவீத கமிஷனை முன்கூட்டியே வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் 150 கோடி ரூபாய் கடன் பெற ஹரிநாடாரை அணுகியுள்ளார். அவருக்கு பணம் கடனாக பெற்றுத் தருவதாக உறுதி அளித்து அவரிடமிருந்து 16 கோடி ரூபாய் கமிஷனாக பெற்றுள்ளதாக தெரிகிறது.

ஆறு மாதங்கள் ஆகியும் தொழிலதிபருக்கு கடன் கிடைத்தபாடில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் ஹரி நாடாரை தொடர்புகொண்டு இது குறித்து விசாரித்துள்ளார். மேலும் கடன் கிடைக்கவில்லை எனில் தான் கொடுத்த கமிஷன் 16 கோடி ரூபாயை திரும்ப தர வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த ஹரிநாடார் அவருக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் பெங்களூரு மாநகர போலீஸாரிடம் உரிய ஆதாரங்களுடன் அந்த தொழிலதிபர் புகார் அளித்துள்ளார். தமிழக தேர்தலும் முடிவடைய பெங்களூரு போலீசார் ஹரி நாடாரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சென்னையில் உள்ள அவரது அலுவலகம் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அவர் பிரச்சாரத்தின்போது தங்கியிருந்த வீடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர். சென்னை அலுவலகம் மற்றும் அவரது தொடர்பில் உள்ள நபர்களை பிடித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இதுகுறித்த தகவல் தெரிய வர ஹரி நாடார் தலைமறைவாக இருந்ததாகவும் தெரிகிறது.

அவர் கேரள மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக பெங்களூரு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் கோவளம் அருகே உள்ள பூவார் கடற்கரையோரப் பகுதியில் தனியார் சொகுசு விடுதியில் மறைந்திருந்த அவரை போலீசார் கைது செய்து தங்களுடன் பெங்களூரு அழைத்துச் சென்றுள்ளனர்.

அவருடைய நகைகள், பல லட்சம் ரொக்கப் பணம் மற்றும் அவருடைய 3 சொகுசு கார்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பண மோசடி உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடமாடும் நகை கடையான ஹரி நாடார் சட்டமன்றத்திற்கு செல்வார் என ஆலங்குளம் தொகுதியில் அவருக்கு வாக்களித்த மக்கள் நினைத்திருந்த நிலையில் அவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: