நாலரை கிலோ நகையை தன் ஒல்லி உடம்பில் கில்லி போல தூக்கித் திரியும் ஹரி தேர்தலுக்கு தேர்தல் சூறாவளியாய் வந்து பின்பு காற்று போன பலூனாய் காணாமல் போய்விடுவார்.
சட்டமன்றத் தேர்தலில் ஹெலிகாப்டரில் தொடர்ந்து பறப்பதில் கமல்ஹாசனுக்கு சவாலாக இருக்கிறார் பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார்.
சிவாஜி படத்தில் வந்திறங்கும் ரஜினி போல பில்ட் அப் கொடுக்கும் இவர்தான் ஹரி நாடார். பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர். நாலரை கிலோ நகையை தன் ஒல்லி உடம்பில் கில்லி போல தூக்கித் திரியும் ஹரி தேர்தலுக்கு தேர்தல் சூறாவளியாய் வந்து பின்பு காற்று போன பலூனாய் காணாமல் போய்விடுவார். 11 கிலோ தங்கத்தோடு தங்கியிருக்கும் அவரின் மொத்த சொத்து மதிப்பு 12 கோடி ரூபாய்.
2 கே அழகானது காதல் படத்தின் மூலம் 4 வேடங்களில் கதாநாயகனாக அறிமுகமாகி தமிழர்களின் விழிகளுக்கு கிலி பிடிக்க வைக்கக் காத்திருக்கும் இவர், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழரையே சில வாக்குகளில் முந்திய தமிழர். தற்போதைய சட்டமன்றத் தேர்தலிலும் 44 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திவிட்டு பறந்து பறந்து பரப்புரை செய்வதில் உலக நாயகன் கமல்ஹாசனையே வந்து பார் என... சாரி... பறந்து பார் என சவால் விடுகிறார்.
தனக்காக கூடும் கூட்டமெல்லாம் ஓட்டாகும் என ஹரி நாடார், தங்கக்கிளியாய் காத்திருக்கிறார். ஆனால், குவியும் பெண்களெல்லாம் நகைக் கடை விளம்பரம் பார்க்க வந்தவர்களாகவே தெரிவதால் களத்தில் இவர் இலவு காத்த கிளியாகத்தான் பறக்கிறாரோ என தோன்றுகிறது. ஆனாலும் கிராமம் கிராமமாக சென்று பரப்புரை செய்து அரசியல் கட்சி பேச்சாளர்களை விட அதிகமாக என்டர்டெய்ன்மென்ட் கொடுக்கும் ஹரி நாடார், இந்த முறை அகலக் கால் வைத்திருப்பது ஆலங்குளத்தில்.
களத்தில் காமெடியனாக இருந்தாலும், வடிவேலுக்காக ஓடிய படங்கள் கூட உண்டு என்பதால் ஆலங்குளத்தில் வெற்றிக் கனவில் இருக்கும் திமுகவின் பூங்கோதையும், அ.தி.மு.க.,வின் மனோஜ் பாண்டியனும் கொஞ்சம் கலக்கத்தில்தான் இருக்கிறார்களாம். நடமாடும் நகைக் கடையான இந்த தங்கமகன் தேர்தலில் தகதகவென ஜொலிப்பாரா என கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்.