பட்டியலினத்தவருக்கு முடி திருத்தியதால் ஊரைவிட்டு விரட்டப்பட்ட குடும்பம்- ஆட்சியரிடம் முறையிட்ட பாதிக்கப்பட்டவர்கள்

Youtube Video

விருதுநகர் மாவட்டத்தில், வேறு ஜாதிப் பெண்ணைக் காதலித்ததாலும், பட்டியலினத்தவருக்கு முடிதிருத்தியதாலும், முடிதிருத்தும் தொழிலாளியை ஊரை விட்டு வெளியேற்றியுள்ளனர், கிராம மக்கள். தங்கள் சகோதரனை மீட்டுக் கொடுக்கும்படியும், கிராமத்திற்குள் அனுமதிக்கும்படியும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்துள்ளனர்.

 • Share this:
  விருதுநகர் மாவட்டம் உலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜா - சரஸ்வதி தம்பதி. இந்த தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். ராஜா, கிராமத்தில் முடிதிருத்தும் கடை நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மைத்துனர்கள் பாலமுருகன் மற்றும் 20 வயதான கிருஷ்ணமூர்த்தி இருவரும் இருந்து வந்தனர். அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு ஜாதியைச் சேர்ந்த பெண்ணை கிருஷ்ணமூர்த்தி, 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். இந்த நிலையில், ராஜா உள்ளூரைச் சேர்ந்த பட்டியலினத்தவரின் குழந்தைகளுக்கு முடிதிருத்தி வந்தார். அதற்கு வேறு ஜாதியைச் சேர்ந்த ஊர்ப் பிரமுகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  இதற்கிடையே, ராஜாவின் சகோதரர் கிருஷ்ணமூர்த்தி தான் காதலித்த பெண்ணுடன் ஊரை விட்டு வெளியேறியுள்ளார். பெண்ணின் தரப்பு பல இடங்களில் காதல் ஜோடியைத் தேடி, இறுதியில் திருப்பூரில் பிடித்துள்ளனர். பின்னர் காதல் ஜோடியை திருச்சுழி காவல்நிலையத்திற்கு அழைத்து வருவதாகவும் அங்கு வரும்படியும் ராஜாவிற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ராஜா அங்கு சென்றபோது, அவரது சகோதரர் கிருஷ்ணமூர்த்தி அங்கு இல்லை. அவரது காதலி மட்டும் போலீசாரிடம் ஆஜர்படுத்தப்பட்டு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

  இந்த சம்பவத்தை அடுத்து, ராஜாவும் அவரது குடும்பத்தினரும் பட்டியலினத்தவருக்கு முடிதிருத்தியதால் ஊரை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் என ஊர்ப் பஞ்சாயத்தில் முடிவெடுக்கப்பட்டு தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  உயிருக்கு அஞ்சி ராஜா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 6 பேர் தற்போது கட்டனூர் கிராமம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் வசித்து வருகின்றனர். அங்கு ராஜாவின் மகளைப் பாம்பு கடித்ததால் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  மேலும் படிக்க...கோவையில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: காரணம் என்ன?  இந்த நிலையில், தங்கள் சகோதரர் கிருஷ்ணமூர்த்தியை மீட்டுத் தரும்படியும், மீண்டும் கிராமத்திற்குள் தங்களை அனுமதிக்கும்படியும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஜா தரப்பினர் மனு அளித்துள்ளனர்.
  Published by:Vaijayanthi S
  First published: