சென்னை ராயப்பேட்டை, லாயிட்ஸ் சாலை துவாரகா நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பாரதிய ஜனதா கட்சி பிற்படுத்தப்பட்டோர் அணியின் தென்சென்னை மாநில பொதுச் செயலாளராக இருப்பவர் பிரசாத். இவரது தாயார் ராவணம்மா கடந்த மாதம் 23-ஆம் தேதி மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அருகில் உள்ள தனது உறவினரின் குழந்தைக்கு பிறந்தநாள் எனவும் குழந்தையை தாங்கள் வந்து வாழ்த்த வேண்டும் என்று கூறி ராவணம்மாவின் கைகளில் இருந்த மூன்று மோதிரங்களை பறித்து சென்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ராவணம்மா மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கு அடுத்தடுத்த நாள்களில் ஐஸ்ஹவுஸ், ராயப்பேட்டை பகுதிகளில் இதே போன்று மர்ம நபர் ஒருவர் முதியவர்களை குறிவைத்து அவர்கள் கழுத்திலிருந்த சங்கிலி மற்றும் விரல்களில் அணிந்திருந்த மோதிரங்களை பறித்து சென்றதாக புகார்கள் வந்தன.
குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தனியாக செல்லும் முதியவர்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து நகைகளை பறித்துச்செல்வது பெரம்பூரைச் சேர்ந்த திருமலை(45) என்பது தெரியவந்தது.

திருமலை
மேலும் திருமலை டிபி சத்திரம் பகுதியில் தலைமறைவாக இருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்று கைது செய்தனர்.
போலீசாரின் விசாரணையில் இவர் தனியாக நடந்து செல்லும் முதியவர்களிடம் தங்கநகைகளை பறிப்பதை வாடிக்கையாகவே வைத்துள்ளார் என்பது தெரியவந்தது. இரண்டு வழிகளில் இவர் முதியவர்களை ஏமாற்றி வந்துள்ளார் என்பதும் முதலாவதாக தனியாக நடந்து செல்லும் முதியவர்களிடம் அருகில் ஒரு நகை கடை திறந்து இருப்பதாகவும் அங்கு வயதான முதியவர்களுக்கு இலவசமாக நகைகள் கொடுப்பதாகவும் கூறுவார். பின்னர் நகைகள் அணிந்து சென்றால் நகைக்கடையில் இலவசமாக நகைகள் தர மாட்டார்கள் எனவும் தாங்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை கழட்டி தன்னிடம் கொடுத்துவிட்டு, நகை கடையில் தங்க நகையை வாங்கியவுடன் தான் மீண்டும் அதனை ஒப்படைத்ததாகவும் கூறி நகைகளை பறித்து செல்வார்.

சிசிடிவி காட்சிகள்
இரண்டாவது வழியாக அருகில் தனது உறவினர் குழந்தைக்கு பிறந்தநாள் என்றும் தாங்கள் வந்து குழந்தையை ஆசீர்வதித்தால் குழந்தையின் பெற்றோர் ஒரு சவரன் தங்க நகை கொடுப்பார்கள் எனவும் கூறி முதியவர்களின் நகைகளை பறித்து செல்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும் இவர் மீது எஸ்பிளனேடு, அமைந்தகரை, அரும்பாக்கம், வண்ணாரப்பேட்டை, ஜாம்பஜார், அண்ணாசாலை, எஸ்.ஆர்.எம்.சி, கோடம்பாக்கம், சேலையூர், குமரன் நகர் திருவேற்காடு, ஐஸ்ஹவுஸ் உட்பட சென்னையின் பல காவல் நிலையங்களில் இதேபோல முதியவர்களை ஏமாற்றி நகைகளை பறித்துச் சென்ற வழக்குகள் 25-க்கும் மேல் உள்ளது தெரியவந்தது.
கடந்த 2019-ஆம் ஆண்டு அமைந்தகரையில் ஒரு மூதாட்டியை ஏமாற்றி நகை பறிக்கும்போது சுதாரித்து தப்பிக்க முயன்ற மூதாட்டியை தாக்கி அவரிடமிருந்து நகையை பறித்த வழக்கில் திருமலை சிறைக்குச் சென்று இந்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ஆம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் தனியாக நடந்து செல்லும் முதியவர்களை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். குறிப்பாக ஜனவரி மாதம் 23-ஆம் தேதி மயிலாப்பூர் பகுதியிலும் அதற்கு அடுத்தடுத்த நாட்களில் ராயப்பேட்டை மற்றும் ஐஸிஸ் பகுதிகளிலும் தனியாக செல்லும் முதியவர்களை குறிவைத்து நகைகளைப் பறித்துச் சென்றது தெரியவந்தது. இவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 40 கிராம் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இவரிடமிருந்து நகைகளை வாங்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.