• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஊருக்குள் வர கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திரும்பிச் சென்றார் எச். ராஜா!

ஊருக்குள் வர கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திரும்பிச் சென்றார் எச். ராஜா!

எச். ராஜா

எச். ராஜா

  • Share this:
கடலூர் மாவட்டத்தில் உள்ள அரியநாச்சி கோவிலுக்கு வர இருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அவர் திரும்பிச் சென்றார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள அரியநாச்சி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக ஒரே சமுகத்தை சேர்ந்த இருதரப்பினரிடையே பிரச்சினை உள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் இருக்கிறது.

இந்த நிலையில் கோவில் திருப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து வரும் ஒரு தரப்பினர், விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவை வரவேற்று சுவரொட்டிகளை கிராமத்தில் ஒட்டியிருந்தனர்.

வரவேற்று ஒட்டப்பட்ட போஸ்டர்


இந்த நிலையில் இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., தி.மு.க.மற்றும் கிராம மக்கள் சார்பில் எச்.ராஜா வந்தால் கிராமத்தில மோதல் உருவாகும். இந்து அதர்ம கொள்கைவாதி எச்.ராஜா கிராமத்தில் உள்ளே வரக்கூடாது என பதிலுக்கு சுவரொட்டிகள் ஒட்டினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எச். ராஜா வருகைக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்


இதற்கிடையே நேற்று மாலை எச்.ராஜா அரியநாச்சி கிராமத்திற்கு காரில் வந்தார். இதுபற்றி அறிந்த எதிர்ப்பாளர்கள் மாரியம்மன் கோவில் அருகே கருப்புக் கொடிகளுடன் திரண்டனர்.

இதுபற்றி தகவலறிந்த வேப்பூர் போலீசார் விரைந்து சென்று அவர்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் மறுப்பு தெரிவித்ததுடன், தங்கள் கிராமத்திற்குள் எச்.ராஜா வரக்கூடாது என்று தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து போலீசார் எச்.ராஜாவிடம் நிலைமையை எடுத்து கூறினர். மேலும் காரில் இருந்து கிழே இறங்கி உள்ளே செல்ல முற்பட்டார். அப்போது கருப்பு கொடிகாட்டி கோஷம் எழுப்பி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து அவர் அங்கிருந்து காரில் திரும்பிச் சென்றார்.

இதற்கிடையே எச்.ராஜாவை திருப்பி அனுப்பியதை கண்டித்தும், அவரது வருகைக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கோவில் திருப்பணி மேற்கொள்ள வேண்டும் என்று கூறி வருபவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடன் அங்கிருந்த போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் பரபரப்பும் ஏற்பட்டது.

தொடர்ந்து கிராமத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டு பதற்றம் நீடிக்கிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: