சாதியை குறிக்கும் வண்ணங்களில் மாணவர்கள் கயிறு கட்டுவதை தடுக்க அரசு சுற்றறிக்கை - எச். ராஜா எதிர்ப்பு

news18
Updated: August 14, 2019, 3:05 PM IST
சாதியை குறிக்கும் வண்ணங்களில் மாணவர்கள் கயிறு கட்டுவதை தடுக்க அரசு சுற்றறிக்கை - எச். ராஜா எதிர்ப்பு
பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா
news18
Updated: August 14, 2019, 3:05 PM IST
பள்ளி மாணவர்கள் சாதிகளை குறிக்கும் வண்ணங்களில் கயிறு கட்டுவதை தடுக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கைக்கு பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தென் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள், தாங்கள் சார்ந்திருக்கும் சாதியைக் குறிக்கும் வகையில் கைகளில் வண்ணக்கயிறுகள், ரப்பர் பேண்ட்கள் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.  மேலும், சாதிக்கொடிகளை பிரதிபலிக்கும் வகையில் நெற்றியில் பொட்டு வைக்கின்றனர்.

இதனால், பள்ளிகளில் மாணவர்கள் சாதிக்குழுக்களாக இயங்குவதாகவும், இவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டால் சாதிய மோதலாக உருவாவதாகவும் புகார் எழுந்தது.

சில பள்ளிகளில் ஆசிரியர்களும் உள்ளூர் தலைவர்களும் இதற்கு உடந்தையாக இருப்பதாக பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அரசுக்கு அறிக்கை அனுப்பினர்.

இதனை அடுத்து, இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

“தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில் சாதிப்பிரிவுகளை குறிக்கும் வகையில் வண்ணக்கயிறுகளை மாணவர்கள் கட்டி வருவதால் பள்ளிகளில் பிரிவினைகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவர்களின் இந்த பிரிவினை உணர்வை சாதியவாதிகளும், சில ஆசிரியர்களும் கூட ஊக்குவிப்பதாக தெரிய வருகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தலைமைக் கல்வி அலுவலர் அவ்வாறு இருக்கும் பள்ளிகளை கண்டறிந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும். பாகுபாடுகள் காட்டி பிரிவினைகளை தூண்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என்று பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.இந்த உத்தரவின் மூலம் மாணவர்களை ஒழுங்கு நடவடிக்கைக்குள் கொண்டு வர முடியும் என தெரிவிக்கின்றனர்.

அரசின் இந்த உத்தரவுக்கு பாஜக தேசியச்செயலாளர் எச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காரைக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “நடிகர் ரஜினிகாந்த் காஷ்மீர் பிரச்சனையை வரவேற்றது அவர் ஒரு தேச நலன் கொண்டவர் என்பதை காட்டுகிறது.

பள்ளி கல்வி துறை ஆணையர் கண்ணப்பன் 31.07.19 அன்று பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு, நெற்றியில் பொட்டு வைப்பது கூடாது என்ற சுற்றறிக்கையை வாபஸ் பெற வேண்டும். இது இந்து விரோத செயல்.

இந்த சுற்றிக்கையை அனுப்பிய ஆணையரை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ப. சிதம்பரத்தை  பூமிக்கு பாரம் என விமர்சனம் செய்தது மிகச் சரியானதே” என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்திலும், “கையில் கயிறு கட்டுவது. நெற்றியில் திலகமிடுவது இந்து மதநம்பிக்கை தொடர்பானது. இவைகளை பள்ளிகளில் தடை செய்வது அப்பட்டமான இந்து விரோத செயலாகும். மாற்றுமத சின்னங்களை தடை செய்யும் தைரியம் பள்ளி கல்வித்துறை ஆணையருக்கு வருமா? இந்த ஆணை உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்” என்று ட்வீட் செய்துள்ளார்.First published: August 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...