குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐ தரப்பில் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டதையடுத்து வழக்கு விசாரணை ஜனவரி 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் புகையிலை பொருட்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர்.
இந்த சர்ச்சையில் அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டது.
இந்நிலையில் இந்த குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த வழக்கில் கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் கடந்த 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளி வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் சிபிஐ போலீஸார் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 6 பெயர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தது. அமைச்சர் மற்றும் டிஜிபி என வேறு யாருடைய பெயர்களும் அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை.
இதனிடையே முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு கடந்த ஜூலை 19 ஆம் தேதி அனுமதி வழங்கியது.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு கடந்த முறை சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் 11 பேருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருந்ததால் அதனை திருத்தம் செய்தும் சாட்சிகள் குறித்த விபரங்கள் மற்றும் அவர்களின் வாக்குமூலம் குறித்த விபரங்களை இணைத்து தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: அடுத்த 12 மணிநேரத்தில் வலுப்பெறும் புதிய காற்றழுத்தம்.. வானிலை மையம் எச்சரிக்கை
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இதுவரை 7 பேருக்கு எதிராக வழக்கை நடத்த மட்டுமே மத்திய-மாநில அரசுகளிடம் அனுமதி பெற்றிருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த பிழைகளை முழுமையாக திருத்தி தாக்கல் செய்ய வேண்டும் எனவும் யார் யாருக்கு எதிராக வழக்கை நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 10 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
இதனிடையே இந்த வழக்கிற்கு தொடர்பில்லாமல் முடக்கப்பட்ட அசையா சொத்துக்களை விடுவிக்க வேண்டுமென குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கின் திருத்தப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்யாத நிலையில் சொத்துக்களை விடுவிக்க முடியாது என மறுத்து விட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CBI, Chennai High court, Vijayabaskar