• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நவம்பர் 1ம் தேதி முதல் மதுக்கூடங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

நவம்பர் 1ம் தேதி முதல் மதுக்கூடங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

நவம்பர் 1ம் தேதி முதல் மதுக்கூடங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கான நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில், வரும் நவம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை மேலும் பல தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நவம்பர் 1 ஆம் தேதி முதல், பல்வேறு நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில், அனைத்து பள்ளிகளிலும், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வரையுள்ள வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    திரையரங்குகள் 100 சதவீதம் பார்வையாளர்களுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதேபோல், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களுடன் அனைத்து வகை தனித்து இயங்கும் மதுக்கூடங்களும், செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மதுக்கூடங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கான நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, மதுக்கூடங்களின் நுழைவாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்பே மதுக்கூடங்களுக்கு உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும்,மதுக்கூடங்ளின் ஒப்பந்ததாரர்கள் வாடிக்கையாளர்களின் பெயர் மற்றும் தொலைப்பேசி எண் கட்டாயம் சேகரித்து பதிவேட்டில் பராமரிக்க வேண்டும் என்றும், பணியாளர்கள் கூடுதல் கையுறைகள் பயன்படுத்துவதோடு, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி, 6 அடி சமூக இடைவெளி பின்பற்றும் வகையில் கோடுகள் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், மதுக்கூடங்களுக்கு உள் நுழையவும் வெளியேறவும் தனித்தனி வழியை பின்பற்ற வேண்டும், கூட்டம் கூடுவது தடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    வாடிக்கையாளர்கள் முக கவசம் கட்டாயம் அணிவதோடு, கொரோனா நோய் தொற்றின் அறிகுறி இல்லாத வாடிக்கையாளர்களை மட்டுமே மதுக்கூடங்களுக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும், 55 வயதிற்கு கீழ் உள்ள பணியாளர்களை பணி அமர்த்தக்கூடாது எனவும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: