முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு இறங்கியுள்ளது. இது தொடர்பாக சென்னை கலைவாணர் அரங்கில் மக்கள் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது, பேனா நினைவு சின்னம் குறித்து கிராபிக்கல் வீடியோ மூலம் பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறை விளக்கம் அளித்தது.
3 பகுதிகளாக நினைவு சின்னம் அமைக்கப்பட உள்ள நிலையில், முதல் பகுதியில், கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து கடற்கரை வரை சுமார் 220 மீட்டர் நீளம், 6 மீட்டர் உயரத்தில் கான்கிரீட் பாலம் கட்டப்பட உள்ளது. கான்கிரீட் பாலம் முடியும் மணல் பரப்பில் இருந்து கடலுக்குள் சில மீட்டர் நீளத்தில் இரும்பு பாலம் அமைக்கப்படும் என்றும் கடற்கரையின் தன்மை மாறாத வகையில் அதற்கான தாங்கு தூண்கள் அமைக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. 15 மீட்டர் இடைவெளியில் தூண்கள் அமைக்கப்படும் என்பதால், மீன்பிடி படகு போக்குவரத்திற்கு இடையூறு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் பகுதியாக, இரும்பு பாலம் முடியும் இடத்தில் இருந்து கடலுக்குள் 360 மீட்டர் தொலைவில் 8 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்பட உள்ளது. பேரிடர்களை கருத்தில் கொண்டு, அவற்றைத் தாங்கும் வகையில் உரிய தொழில்நுட்பத்தின்படி கட்டுமானம் மேற்கொள்ளப்படும் என்றும் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பேனா நினைவுச் சின்னத்திற்கு தடை விதிக்கக்கோரி ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடுத்த மனு மீது தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது. அப்போது, பேனா நினைவுச்சின்னம் குறித்து பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டதாக அரசு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். அதை ஏற்க மறுத்த நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, பத்திரிகைகளில் தாம் படித்தது உண்மை என்றால் அது கருத்துக்கேட்புக் கூட்டமே இல்லை என்று கூறினார். எல்லா தரப்பினரையும் அழைத்து நடத்தப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, பேனா நினைவு சின்னத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, DMK leader Karunanidhi, Karunanidhi statue, Karunanidhi's memorial, National Green Tribunal, TN Govt