முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திருவொற்றியூர் மீன்பிடி துறைமுக பணிகளை நிறுத்த பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

திருவொற்றியூர் மீன்பிடி துறைமுக பணிகளை நிறுத்த பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

திருவொற்றியூர்

திருவொற்றியூர்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னை திருவொற்றியூரில்  உரிய சுற்றுச்சூழல் அனுமதியின்றி மீன்வளத்துறை அமைத்து வரும் மீன்பிடி துறைமுக பணிகளை நிறுத்தி வைக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் நிலவி வரும் நெரிசலைக் குறைக்கவும், சூரை மீன், இறால் உள்ளிட்ட ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை மேம்படுத்தவும் புதிய மீன்பிடித் துறைமுகத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

திருவொற்றியூரில் ரூ. 242 கோடி மதிப்பீட்டில் ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி 2018 ஜூன் 6-ம் தேதி சட்டப் பேரவையில்  வெளியிட்ட அறிவிப்பு மீனவர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.

திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு,  புதிய மீன்பிடித் துறைமுகம் அமைப்பது குறித்த பொதுமக்கள் கருத்து கேட்கும் கூட்டம் கடந்த ஆண்டு   ஜூலை மாதம்  திருவொற்றியூரில் அப்போதைய சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி தலைமையில்  நடைபெற்றது.

இந்த துறைமுகமானது 500 முதல் 800 படகுகள் நிறுத்தும் அளவிற்கும் 60,000 டன் மீன்களைக் கையாளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டது.   இந்த துறைமுகம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் மற்றும் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அனுமதிகோரி மீன்வளத்துறையானது தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையிடம் விண்ணப்பித்திருந்தது.

ஆனால், இந்த இரண்டு அனுமதிகளையும் பெறுவதற்கு முன்பாகவே துறைமுக கட்டுமானப் பணிகளை மீன்வளத்துறை தொடங்கியது. இதன் காரணமாக திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் கே ஆர் செல்வராஜ் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது குற்றச்சாட்டு தொடர்பான அரசு  ஆவணங்களை மூத்த வழக்கறிஞர் ரித்விக் தத்தா மற்றும் மகேஷ்வரன் ஆகியோர் முன்வைத்து வாதாடினர்.

ஆவணங்களின்  அடிப்படையில் இத்திட்டத்திற்கு  சுற்றுச்சூழல் மற்றும் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அனுமதி இன்னும்கிடைக்காத காரணத்தினால் துறைமுகம் கட்டும் பணியை அப்படியே நிறுத்தி வைக்கவும் மாசு கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்,  கடற்கரை ஒழுங்குமுறை மண்டல ஆணையம் ஆகியோர் கொண்ட குழு  நேரில் ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மார்ச் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Also see...

First published:

Tags: National Green Tribunal