‘30 வருஷம் சமையல் வேலை செஞ்சு சேத்து வச்ச காசுப்பா... 5 நிமிஷத்துல பறிச்சிட்டு போயிட்டாங்க...’

மூதாட்டி சுலோச்சனா

நகையை பறிகொடுத்த மூதாட்டி அளித்த புகாரின் பேரில் பாண்டிபஜார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

  • Share this:
சென்னை தி.நகரில் சுலோச்சனா என்ற மூதாட்டி 30 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் வேலை செய்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய நகைகளை நூதன முறையில் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கூறிய அந்த மூதாட்டி கதறி அழுதார்.

சென்னை தி.நகர் கண்ணம்மாபேட்டை எஸ்.பி. கார்டன் பகுதியைச் சேர்ந்த 72 வயது மூதாட்டி சுலோச்சனா. சற்று காது கேட்காத நிலையில் சமையல் வேலை செய்து வரும் இவர், ஆடிப்பெருக்கு தினமான நேற்று மதியம் தி. நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள முப்பாத்தம்மன் கோயிலுக்கு சென்றுள்ளார்.

சாமி கும்பிட்டுவிட்டு பல்லாயிரக்கணக்கானோர் நடமாடும் தி.நகர் பிரதான சாலை வழியாக மூதாட்டி வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில், ஒருவர் மூதாட்டியிடம் அம்மா உங்களுக்கு காது கேட்கவில்லையா? அங்கே ஒருவர் உங்களை அழைக்கிறார் என பாட்டியிடம் கூறியுள்ளார்.

மூதாட்டியும் அந்த நபரிடம் வந்து, தங்கள் யார் என்று தெரியவில்லையே? எனக் கூறிய போது, இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு மர்ம நபர் “நான் நீங்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்தவன் தான் எனக் கூறி கழுத்திலும் காதிலும் இவ்வளவு நகைகளை போட்டு வரலாமா? இரு தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் நகைக்கு ஆசைப்பட்டு சிலர் மூதாட்டியை கொன்று நகையை திருடிச் சென்றதும் அந்த செய்தி டி.வி,யிலும், நியூஸ் பேப்பரிலும் வந்தது உங்களுக்கு தெரியாதா? எனக் கூறி உடனடியாக நகைகளை கழட்டி பேப்பரில் மடித்து பையில் போட்டு எடுத்துச் செல்லுங்கள் எனக் கூறியுள்ளார்.

Must Read : உல்லாசத்துக்கு அழைத்த இளம்பெண்.. உற்சாகத்துடன் சென்ற பேப்பர் ஏஜெண்ட்- கதவை திறந்ததும் காத்திருந்த அதிர்ச்சி

மூதாட்டி மறுக்க, நான் உங்களுக்கு மகன் போன்றவன் என ஆசை வார்த்தை கூறி கழுத்தில் இருந்த 6 சவரன் தாலி சரடு மற்றும் 3 சவரன் வளையல் ஆகியவற்றை கழற்றி அதை ஒரு வெள்ளை பேப்பரில் மடித்து மூதாட்டியின் கைப்பையில் போட்டுள்ளனர்.
பின்பு மூதாட்டி டீக்கடையில், டீ குடிக்கும் போது நகையை எடுத்து பார்த்தபோது வெள்ளைப் பேப்பரில் இருந்த நகைகள் காணாமல் போயிருப்பதும், வந்திருந்த மர்ம நபர்கள் இருவரும் அதனை நூதனமான முறையில் மோசடி செய்திருப்பதும் கண்டு மூதாட்டி அதிர்ச்சி அடைந்தார். பதறிப்னோன பாட்டி, பாண்டி பஜார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“30 ஆண்டுகளுக்கும் மேலாக தான் சமையல் வேலை பார்த்து வருவதாகவும், யாருடைய பணத்தையும் நம்பாமல் இறுதிக் காலத்திலாவது சிறிது தங்கம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு இதனை வாங்கியதாகவும்” தெரிவித்த மூதாட்டி, “இத்தனை வருட காலம் தான் சேமித்து வைத்த மொத்த பணத்தையும் மோசடிக்காரர்கள் பிடுங்கி சென்றுவிட்டதார்கள், என் நகைகளை திரும்பப் பெற்றுக் கொடுப்பவர்கள் சாமிக்கு சமம்.” என்று கூறி மூதாட்டி கதறி அழுதது அப்பகுதி மக்களையே சோகத்தை ஏற்படுத்தியது.
Published by:Suresh V
First published: