நிவர் புயல் - இன்று பொது விடுமுறை - டாஸ்மாக் கடைகளை சூழலுக்கு ஏற்ப மூட உத்தரவு

டாஸ்மாக்

  • Share this:
    நிவர் புயலையொட்டி இன்று டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவது சம்பந்தமாக சூழ்நிலைக்கேற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவுவை கடைபிடிக்க மாவட்ட மேலாளர்களுக்கு வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த 21-ந் தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நிவர் புயலாக மாறியது.  இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயல் 6 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வந்த நிலையில், தீவிர புயலாக மாறியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

    இது கடலூரில் இருந்து 310 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 320 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு, தென்கிழக்கில் 370 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இந்த தீவிர புயலானது அடுத்த 12 மணி நேரத்தில் அதீத தீவிர புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

    நிவர் புயல் அடுத்த 6 மணி நேரத்திற்கு மேற்கு, வடமேற்கில் நகர்ந்து அதன்பின் வடமேற்கில் நகரும் என்றும்,  காரைக்கால்- மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் அதீத தீவிர புயலாக இன்றிரவு கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 130 கிலோ மீட்டர் முதல் 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும்.

    தீவிர புயல் காரணமாக சென்னை, தஞ்சை, நாகை, திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, தமிழகம், புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, தமிழகம், புதுச்சேரியில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாக வில்லை. தற்போது, டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவது சம்பந்தமாக சூழ்நிலைக்கேற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவுவை கடைபிடிக்க மாவட்ட மேலாளர்களுக்கு வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.





    மழை, புயல் செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Yuvaraj V
    First published: