அரசு அலுவலகத்தில் பிரதமர்
மோடியின் போட்டோவை, பெண் ஊழியர் ஒருவர் சுவற்றில் மாட்டியதும், அதற்கு அங்குள்ள அதிகாரிகள் அவரிடம் கடிந்துகொண்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம், ஆலாந்துறை அடுத்த பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பாஜக ஆதரவாளர் ஒருவர் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்ததற்காக, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஆலாந்துறை போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.இதே போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க முயன்றும் அனுமதிக்கப்படவில்லை.
இதனிடையே, அண்மையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நியாயவிலைக் கடைக்குள் நுழைந்து பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அரசு அலுவலகம் ஒன்றின் சுவரில் பெண் ஒருவர் பிரதமர் மோடியின் போட்டோவை மாட்டியதற்கு, அங்கிருந்த சக ஊழியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அந்த பெண்ணிடம் போட்டோவை கழட்டும் படி, அவரிடம் கடுமையாகவும் நடந்துக்கொண்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், போட்டோவை கழட்டு, கழட்டு என அந்த பெண்ணை அதிகாரிகள் சிலர் கடிந்துகொள்கின்றனர். அப்போது, போட்டோவை கழட்டு என ஒருவர் அந்த பெண்ணின் முதுகில் தட்டுகிறார். ஆனால் அந்த பெண் அதிகாரியின் பேச்சுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. தொடர்ந்து, அவர்கள் கூறியபடி மோடியின் போட்டோவை கழட்டி எடுத்து கொண்டு வேறு ஒரு அறைக்குள் எடுத்து செல்கிறார்.
Must Read : இலங்கைக்கு ஏற்பட்ட நிலை இந்தியாவிலும் ஏற்படும் - ப.சிதம்பரம் எச்சரிக்கை
இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வரும் பலரும் தற்போது அவரவர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பதிவு செய்து கூறியதாவது,
பெண்ணை தொட்டு கடிந்துகொண்ட அதிகாரியின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். மோடியின் கொள்கை எனக்கும் பிடிக்கவில்லை தான். ஆனால், அரசு அலுவலங்களில் விதிகளின் படி, பிரதமரின் புகைப்படம் வைக்கப்பட வேண்டும்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் முதல்வரை வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.