ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

டாஸ்மாக் ஊழியர்களை கொத்தடிமைகள்போல நடத்தும் தமிழ்நாடு அரசு - சீமான் காட்டமான அறிக்கை!

டாஸ்மாக் ஊழியர்களை கொத்தடிமைகள்போல நடத்தும் தமிழ்நாடு அரசு - சீமான் காட்டமான அறிக்கை!

சீமான்

சீமான்

Seeman | ஊதிய உயர்வு உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

    ஊதிய உயர்வு உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். 

    இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நுகர்பொருள் வாணிப கழகத்தின் ஓர் அங்கமாக செயல்பட்டு வரும் மதுபான சில்லறை விற்பனை கூட ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளாமல் காலம் கடத்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

    20 ஆண்டுகளாக டாஸ்மாக் ஊழியர்கள் பணியாற்றியும் இதுவரை உரிய ஊதியம் கூட வழங்காமல் கொத்தடிமைகள் போல நடத்தும் தமிழ்நாடு அரசின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாத கொடுங்கோன்மையாகும்.

    இதையும் படிங்க : சென்னை டிராஃபிக் ஜாமில் இருந்து விடுதலை... போக்குவரத்து நெரிசலை தெரிந்துகொள்ள செயலி அறிமுகம்

    தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி, அதில் பணியாற்றும் ஊழியர்களை வேறு அரசுப் பணிகளுக்கு மாற்றவேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் முதன்மையான நீண்டகால கோரிக்கை என்ற போதிலும், மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வரை, அதில் பணியாற்றும் 27000 ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் நாம் தமிழர் கட்சி உறுதியாக இருக்கிறது.

    கடந்த 20 ஆண்டுகளாக மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றி வரும் உதவி விற்பனையாளர், விற்பனையாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு இன்று வரை தொகுப்பூதியத்தின் கீழ் மிக குறைந்த அளவு ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரையும் நுகர்பொருள் வாணிப கழகத்தின் இதர விற்பனை பிரிவுகளான அமுதம் அங்காடி, ஆவின் மற்றும் பூம்புகார் கைவினைக் கூடங்களில் பணிபுரியும் ஊழியர்களை போன்று காலமுறை ஊதியத்துக்கு மாற்றி உடனடியாக பணி நிரந்தரமும் செய்திட வேண்டும்.

    இதையும் படிங்க : ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தியை ஏன் நிறுத்தக்கூடாது? ஐகோர்ட் கேள்வி...

    மேலும், டாஸ்மாக் ஊழியர்களை ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பந்தாடுவதை தடுக்க, அவர்களின் பணியிட மாறுதலுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி விரைந்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, மதுக்கூடங்களை நடத்தும் ஆளுங்கட்சியினர் விற்பனை நடவடிக்கைகளில் தலையிட்டு ஊழியர்களை மிரட்டி, தாக்கும் போக்கினையும் உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும்.

    ஆகவே, தமிழ்நாடு அரசின் மதுபான விற்பனை கூட ஊழியர்களின் மேற்கண்ட நியாயமான கோரிக்கைகளை இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழ்நாடு அரசு நிறைவேற்றித்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Published by:Karthi K
    First published:

    Tags: Chennai, Seeman