ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சட்டப்பேரவையில் மசோதா.. ஆளுநர் மாளிகையில் துணைவேந்தர்கள் மாநாடு

சட்டப்பேரவையில் மசோதா.. ஆளுநர் மாளிகையில் துணைவேந்தர்கள் மாநாடு

துணைவேந்தர்களுடன் ஆளுநர்

துணைவேந்தர்களுடன் ஆளுநர்

துணைவேந்தர்கள் மாநாட்டில் உரையாற்றிய ஆளுநர் ரவி, 2047-ல் இந்தியா சர்வதேச அளவில் முன்னிலை வகிக்க கல்விமுறைகளில் மாற்றங்கள் தேவை என குறிப்பிட்டார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வழிவகை செய்யும் சட்ட திருத்த மசோதா சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. அதேவேளையில், உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் தொடங்கியது.

  மாநில பல்கலைக்கழகங்களில், மாநில அரசே துணைவேந்தரை நியமிக்க ஏதுவாக தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதாவுக்கான சட்ட முன்வடிவை  உயர்  கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

  இது தொடர்பாக சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ கடந்த 4 ஆண்டுகளாக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தனக்குமட்டுமே உரிமை என செயல்பட்டு, உயர்கல்வியை அளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மாநில அரசை மதிக்காமல் செயல்படும் போக்கு தலை தூக்கியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியால் அதன் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்யமுடியவில்லை என்பது ஒட்டுமொத்த பல்கலைக்கழக நிர்வாகத்தில் குளறுபடிகளை ஏற்படுத்துகிறது. மக்கள் ஆட்சியின் தத்துவத்துக்கு விரோதமாக உள்ளது” என்று பேசியிருந்தார்.

  ஆளுநரின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு இந்த மசோதாவை கொண்டுவந்திருப்பதாக பேசப்படும் நிலையில், உதகமண்டலத்தில் உள்ள ராஜ்பவனில் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான 2 நாள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தொடங்கிவைத்தார்.

  இதையும் படிங்க: துணைவேந்தர் நியமனம்.. மாநில அரசை ஆளுநர் மதிப்பதில்லை: மு.க.ஸ்டாலின்

  அப்போது உரையாற்றிய ஆளுநர் ரவி, 2047-ல் இந்தியா சர்வதேச அளவில் முன்னிலை வகிக்க கல்விமுறைகளில் மாற்றங்கள் தேவை என குறிப்பிட்டார்.மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாறாட்டம் காரணமாக  2014ம் ஆம் ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி அடிப்படை மாற்றத்தை கண்டதாக குறிப்பிட்ட அவர், கடந்த 7 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய புரட்சிகர மாற்றங்களை கண்டுள்ளதாக தெரிவித்தார்.

  இந்த மாநாட்டில்,zoho மென்பொருள் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்டோரும் பங்கேற்றனர். துணைவேந்தர்கள் ஆகியோருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி புகைப்படமும் எடுத்துகொண்டார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவிவருகிறது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Nilgiris, Tamil Nadu Governor