Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஒரே வாரத்தில் 2வது முறை.. டெல்லி சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி.. பின்னணி என்ன?

ஒரே வாரத்தில் 2வது முறை.. டெல்லி சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி.. பின்னணி என்ன?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக ஆளுநர் டெல்லி செல்வது கவனிக்கத்தகுந்ததாக மாறியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதிலிருந்தே, அவருக்கும் ஆளும் திமுக அரசுக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோல் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் உரையின் போது, தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் இடம்பெற்ற சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்தார்.

இது அவையில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை முதலமைச்சர் வாசித்துக் கொண்டிருக்கும் போதே, ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து வெளியேறினார். இந்த சம்பவங்கள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய புகார் கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் சட்ட அமைச்சர் ரகுபதி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சமர்ப்பித்தனர். அதில் ஆளுநர் வரம்பை மீறி செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த புகார் கடிதத்தை நடவடிக்கைக்காக உள் துறை அமைச்சகத்திற்கு குடியரசுத் தலைவர் அனுப்பிவைத்துள்ளார்.

இதனிடையே சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரெனெ டெல்லி சென்றார். தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய அவர், அரசு சார்ந்த எந்த நிகழ்வுகளிலும் பங்கேற்கவில்லை, யாரையும் சந்திக்கவில்லை. தன்னுடைய உறவினர் திருமணத்தில் கலந்துகொண்டுவிட்டு உடனே சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையிலிருந்து இன்று காலை விமானத்தில் டெல்லி சென்றார். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆளுநர் சந்திக்கவுள்ளதாகவும், அப்போது தமிழ்நாட்டு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக ஆளுநர் டெல்லி செல்வது கவனிக்கத்தகுந்ததாக மாறியுள்ளது.

First published:

Tags: Amit Shah, Govenor, RN Ravi