Home /News /tamil-nadu /

நிவாரணமோ, நிதி உதவியோ வேண்டாம்; வாரச் சந்தையை அனுமதியுங்கள் - புதுக்கோட்டை வியாபாரிகள் கோரிக்கை

நிவாரணமோ, நிதி உதவியோ வேண்டாம்; வாரச் சந்தையை அனுமதியுங்கள் - புதுக்கோட்டை வியாபாரிகள் கோரிக்கை

புதுக்கோட்டை வார சந்தை நடைபெறும் இடம்

புதுக்கோட்டை வார சந்தை நடைபெறும் இடம்

வார சந்தையை செயல்பட அனுமதி அளித்து தங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று புதுக்கோட்டை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் பல்வேறு தரப்பினரும் தொழிலின்றி, வருமானமின்றி வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்றாடும் கூலி வேலைக்குச் செல்லும் மக்கள் தொழிலாளர்கள் என பலரையும் இந்த ஊரடங்கு புரட்டிப் போட்டுள்ளது. கொரோனாவின் கோரத்தாண்டவம் ஒருபுறம் அதிகரித்து வந்தாலும் பொது மக்களின் வாழ்வாதாரம் மற்றொருபுறம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது நீட்டிக்கப்பட்ட நான்காம் கட்ட ஊரடங்கில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.

போக்குவரத்தை தவிர மற்ற அனைத்திற்கும் தளர்வுகளை அரசு அறிவித்திருந்தாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாரச்சந்தை தொடங்க இதுநாள் வரை மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை, புதுக்கோட்டையை பொருத்தவரை உழவர் சந்தை, தினசரி மார்க்கெட் இயங்கி வருகின்றது. மேலும் புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகின்றது.

நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி காய்கறி மார்க்கெட்டில் தனிமனித இடைவெளி பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய சந்தையாக உள்ள புதுக்கோட்டை வாரச் சந்தையை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகளும் அவர்களிடம் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் தற்போது வாரச்சந்தை நடத்த அனுமதி வழங்காததால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

இந்த வாரச்சந்தையில் ஆடு, மாடு, கோழி, மீன், காய்கறிகள், வாழை, தேங்காய் என அனைத்து விற்பனை நடைபெறும். குறிப்பாக புதுக்கோட்டை, அறந்தாங்கி, அன்னவாசல், தேனிபட்டி, .புதுப்பட்டி ராயபுரம், நச்சாந்துபட்டி, கடியாபட்டி, குளிபிறை, அரிமளம் உள்ளிட்ட ஊர்களில் வாரத்தில் ஏழு நாட்களும் ஏழு இடங்களில் நடைபெறும் வாரச்சந்தைகளில் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்திவந்த வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக முற்றிலுமாக முடங்கியுள்ளதால் உணவுக்கே வழியின்றி தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து வாரச்சந்தை வியாபாரிகள் கூறுகையில், கடந்த மூன்று தலைமுறையாக வாரச்சந்தை மட்டுமே நம்பி வாழ்க்கையை நடத்தி வருகின்றோம். தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வாழ்நாளில் இதுவரை சந்திக்காத வறுமையை சந்தித்து வருகிறோம். கடந்த 60 நாட்களுக்கும் மேலாக வருமானமின்றி பிள்ளை குட்டிகள் கேட்பதை கூட வாங்கி கொடுக்க முடியாமல் உணவிற்கே வழியின்றி தவித்து வருகிறோம்.

பல்வேறு தளர்வுகளை அறிவித்து வரும் தமிழக அரசு வாரச்சந்தை நடத்த மட்டும் இதுவரை அனுமதி வழங்கவில்லை. நாங்கள் வாரத்தில் ஏழு நாட்களும் ஏழு இடங்களில் நடைபெறும் சந்தைகளில் வியாபாரம் செய்வோம். அதில் வரும் வருமானத்தை வைத்து வாழ்க்கையை நகர்த்தி வந்தோம். எங்களுக்கு சந்தை தொழிலை விட்டால் வேறு எதுவும் தெரியாது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் இதுநாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. அரசு பின்பற்ற கூறிய அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி தனிமனித இடைவெளியுடன் சந்தையை நடத்த தயாராக உள்ளோம். நாங்கள் அரசிடம் நிவாரணமோ நிதியோ கேட்கவில்லை, வாரச்சந்தை நடத்த அனுமதி தான் கேட்கிறோம்.

வழக்கமாக உள்ள சந்தை பகுதியில் அனுமதி அளிக்காவிட்டாலும் எங்களுக்கு என்று ஒரு இடம் ஒதுக்கி அந்த பகுதியில் வியாபாரம் செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும். மேலும் புதுக்கோட்டை வாரச்சந்தை நடைபெறுமிடம் எந்த ஒரு அடிப்படை வசதியுமின்றி சுகாதாரமற்ற முறையில் உள்ளது.

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து மற்ற வியாபாரங்கள் நடைபெற தளர்வுகளை அறிவித்தது போல் சந்தையும் செயல்பட அனுமதி அளித்து தங்களது வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Vijay R
First published:

Tags: Lockdown, Pudukottai

அடுத்த செய்தி