போராட்டங்களில் அடக்குமுறையை ஏவிவிடுவது கண்டிக்கத்தக்கது - டி.டி.வி தினகரன்

போராட்டங்களில் அடக்குமுறையை ஏவிவிடுவது கண்டிக்கத்தக்கது - டி.டி.வி தினகரன்
டிடிவி தினகரன்
  • News18
  • Last Updated: February 15, 2020, 3:03 PM IST
  • Share this:
போராட்டங்களில் அடக்குமுறையை ஏவிவிடுவது கண்டிக்கத்தக்கது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

குடியுரிமை சட்டதிருத்தத்தை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று பகல் 2 மணிக்கு போராட்டம் தொடங்கியது. அவர்களை காவல்துறையினர் தடுக்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். ஐந்து மணி நேரத்தை தாண்டி இரவிலும் போராட்டம் தொடர்ந்த நிலையில், அதனை முடித்துக் கொள்ளுமாறு காவல்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். ஆனால் கலைந்து செல்ல மறுத்த நிலையில் காவல்துறையினர் தடியடி நடத்தினர். காவல்துறையினர் நடத்திய தடியடி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து டி.டி.வி.தினகரன் வெளியிட்ட அறிக்கையில், ’குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்தும், தேசிய குடிமக்கள் பதிவேட்டைச் செயல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அமைதி வழியில் நடத்தும் போராட்டங்களில் அடக்குமுறையை ஏவிவிடுவது கண்டிக்கத்தக்கது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுவதற்கு அரசாங்கமே காரணமாகி விடக்கூடாது.

மதத்தின் அடிப்படையில் குடியுரிமை சட்டத்தைத் திருத்தம் செய்துள்ள மத்திய அரசையும் மற்றும் அதனை நாடாளுமன்றத்தில் ஆதரித்து சட்டமாக்குவதற்குத் துணை நின்ற பழனிசாமி உள்ளிட்டோரைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


'குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைத் திரும்பப்பெற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை தமிழ்நாட்டில் செயல்படுத்தக்கூடாது' உள்ளிட்ட கோரிக்கைகளை இப்போராட்டங்களில் இஸ்லாமியப் பெருமக்களும், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும் முன்வைத்து வருகிறார்கள். இதற்காக தமிழக சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஜனநாயக நாட்டில் எதிர்ப்புகளைப் பதிவு செய்ய தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமையைக் கொண்டு அமைதி வழியில் இத்தகைய போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் மீது ஆட்சியாளர்களும் காவல் துறையினரும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவது தேவையில்லாமல் தேன்கூட்டில் கை வைப்பது போல் ஆகிவிடும். அமைதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பில் இருக்கும் அதிகாரவர்க்கத்தினரே மக்களின் நியாயமான உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் பொது அமைதி கெடுவதற்குக் காரணமாகி விடக்கூடாது. சென்னை வண்ணாரப்பேட்டையில் நிகழ்ந்தது போன்ற சம்பவங்கள் இனிமேல் எங்கும் நடக்கக்கூடாது.

மேலும், குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறக்கோரி நடைபெறும் போராட்டங்களில் ஏற்கனவே பல்வேறு இடங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிர்வாகிகள் பங்கேற்று தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். அது போன்றே, இப்பிரச்னையில் ஜனநாயக வழியில், அமைதியாக போராடும் இஸ்லாமியப் பெருமக்கள் உள்ளிட்டோருக்கு எப்போதும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் களத்தில் துணையாக நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.Also see:

 
First published: February 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்