• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அரசுப்பள்ளிகளில் அதிகரித்த மாணவர் சேர்க்கை: கட்டணம் வசூலிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

அரசுப்பள்ளிகளில் அதிகரித்த மாணவர் சேர்க்கை: கட்டணம் வசூலிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக நிறுவனர் ராமதாஸ்.

பாமக நிறுவனர் ராமதாஸ்.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில், அங்கே கட்டணம் வசூலிப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
    கொரோனாவால் மக்களின் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. பள்ளிகள் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு கவலையளிப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம் ஒரு பைசா கூட கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வி அமைச்சரே எச்சரித்த பிறகும் கட்டணம் வசூலிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

    அரசு பள்ளிகள் வலிமையாக இருந்தால் தான் அனைத்து மாணவர்களுக்கும் சமத்துவமான, தரமான கல்வியை வழங்க முடியும். இந்த தத்துவத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கடந்த 17-ஆம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில், இதுவரை, கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 80,000 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.

    அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒருபுறம் மகிழ்ச்சியளிக்கும் நிலையில், அவ்வாறு சேரும் மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூல் செய்யப்படுவதாக தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் கவலையளிக்கின்றன.

    Also read: நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி 6 மாநிலங்கள் மறுசீராய்வு மனு தாக்கல்..

    சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கைக்கு ரூ.1000 முதல் ரூ.1,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ரூ.3,000 முதல் ரூ.6,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார் கூறியுள்ளனர். அவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணத்திற்கும் எந்த விதமான ரசீதும் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

    அரசு பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து சென்னை, திருப்பூர், அவினாசி உள்ளிட்ட இடங்களில் பெற்றோர்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

    அரசு பள்ளிகளில் தங்களின் பிள்ளைகளை சேர்க்க வரும் பெற்றோர்கள் அனைவரும் பணக்காரர்கள் அல்ல. அவ்வாறு இருக்கும் போது அவர்களிடம் மாணவர் சேர்க்கைக்காக ரூ.6,000 வரை கட்டணம் செலுத்தும்படி கட்டாயப்படுத்துவது எந்த வகையிலும் நியாயமானது அல்ல” என்றார்.



    மேலும் கூறுகையில், “அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் மாணவர்களிடமிருந்து நன்கொடை வசூலிப்பதாக சில பள்ளிகளின் நிர்வாகங்கள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக அரசு சார்பில் நிதி ஒதுக்கப்படும் நிலையில், அதற்காக நன்கொடை என்ற பெயரில் கட்டணம் வசூல் செய்யப்படுவது தவறு. கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரங்களை இழந்து தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வரும் பெற்றோர்களிடம் கட்டணம் செலுத்தும்படி கூறி சிரமப்படுத்தக்கூடாது” என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: