Home /News /tamil-nadu /

பசுமை தமிழ்நாடு திட்டத்துக்கான அரசாணை வெளியீடு

பசுமை தமிழ்நாடு திட்டத்துக்கான அரசாணை வெளியீடு

தலைமைச் செயலகம்

தலைமைச் செயலகம்

பசுமை தமிழ்நாடு திட்டம் செயல்படுத்துவதற்கான உத்தரவு பிறப்பித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    அடுத்த 10 ஆண்டுகளில் காடு மற்றும் மரங்களின் பரப்பளவை 23.98%ல் இருந்து 33% ஆக உயர்த்தும் நோக்கத்துடன் தமிழ்நாட்டின் லட்சியமான 'பசுமை தமிழ்நாடு' திட்டம் செயல்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாடு 1,30,060 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இதில் தற்போது 31,194 சதுர கிமீ பரப்பளவு ( மொத்த பரப்பில் 23.98 சதவீதம்) மட்டுமே பசுமை போர்வை உள்ளது. கடந்த 1988-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய வனக் கொள்கையின்படி, ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 33 சதவீதம், அதாவது தமிழகத்தில் 42,919 சதுர கிமீ பரப்பளவில் பசுமை போர்வை இருக்க வேண்டும். இந்த இலக்கை எட்ட தமிழ்நாடு மேலும் 13,500 சதுர கிமீ பரப்பளவு (மொத்த பரப்பில் 9 சதவீதம்) பசுமை போர்வையை உருவாக்க வேண்டியுள்ளது.

    இதன் காரணமாக அடுத்த 10 ஆண்டுகளில் பசுமை தமிழ்நாட்டை எட்டுவதற்காக "பசுமை தமிழ்நாடு இயக்கம்" தொடங்கப்படும் என நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதற்கான நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் 265 கோடி உள்நாட்டு வகையை சேர்ந்த மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாகவும், இதற்காக 2021-22ம் நிதியாண்டில் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் 47 லட்சம் மரக்கன்றுகளை உருவாக்க ரூ.21 கோடி, 2022-23ம் நிதியாண்டில் 1.30 கோடி மரக்கன்றுகளை உருவாக்க ரூ.17.80 கோடி என மொத்தம் 38.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Tamil Nadu

    அடுத்த செய்தி