Home /News /tamil-nadu /

மகளிர் சுய உதவிக் குழவினர் கடன் தொகைகளை தமிழக அரசு ஏற்க வேண்டும் - சீமான்

மகளிர் சுய உதவிக் குழவினர் கடன் தொகைகளை தமிழக அரசு ஏற்க வேண்டும் - சீமான்

சீமான்

சீமான்

ஊரடங்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர், தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகைகளை தமிழ்நாடு அரசே ஏற்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழகத்திலுள்ள ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களில் இணைந்து பதினைந்து இலட்சத்திற்கும் அதிகமான ஏழை, எளிய கிராமப்புறப் பெண்கள் குழுவாக, தனியாக என வணிகம் செய்வதற்காகவும், குடும்ப மேம்பாட்டிற்காகவும் கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் கடன்களைப் பெற்று முறைப்படி திருப்பிச் செலுத்தி வந்த நிலையில், தற்போது நிலவும் பொருளாதார முடக்கத்தினால் வாங்கியக் கடன்களுக்கு வட்டிகூடக் கட்ட முடியாமல் அவர்கள் பரிதவித்து வரும் செய்தியறிந்து பெரும் கவலையடைந்தேன்.

Also Read : ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை, 100ஐ நெருங்கும் டீசல் விலை : இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பியக்கம்

கடந்த இரண்டாண்டு காலமாக கொரோனா நோய்த்தொற்றுப் பரவலால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கின் விளைவாகப் பெருந்தொழில் நிறுவனங்கள் முதல் சிறு, குறு தொழில்முனைவோர், வணிகர்கள் வரை அனைத்துத்தரப்பு மக்களும் தொழில் முடக்கம், வேலையிழப்பு, வருமானமின்மை உள்ளிட்டக் காரணங்களால் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.

அதனைப்போலவே, கிராமப்புறப் பெண்களும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் முன்னெடுத்தத் தொழில்கள் முடங்கியதால் பெரும் பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். இதனால், அன்றாடக் குடும்பச்செலவுகளுக்கே வருமானமின்றி வறுமையில் வாடுவதோடு சுய உதவிக்குழுக்கள் மூலமாக வாங்கியக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாது திணறி வருகின்றனர்.

இவ்வாண்டின் தொடக்கத்தில் கடந்த பிப்ரவரி-26 அன்று நடைபெற்ற சட்டப்பேரவைக்கூட்டத்தில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அன்றைய அதிமுக அரசு அறிவித்தது. ஆனால், அது போதுமானதாக இருக்கவில்லை என்பதே மகளிர் சுய உதவிக்குழுக்களின் மனவோட்டமாக இருக்கிறது. ஏனெனில், பெரும்பான்மையான மகளிர் சுய உதவிக்குழுப் பெண்கள் தேசிய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளிலேயே பெருமளவு கடன்களைப் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் வாங்கிய கடன்களுக்கான தவணைத்தொகையைச் செலுத்த வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் அவர்களுக்குக் கடும் நெருக்கடி அளித்து வருவதும், அதனை எதிர்கொள்ள முடியாது அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆட்படுவதும் தாங்கொணாத் துயரமாகும்.

Also Read : ‘துரோகம் பண்ணிட்டாங்க அம்மா.. நீங்க வரனும்’ - சசிகலா தரப்பில் மீண்டும் ஒரு ஆடியோ ரிலீஸ்

ஆகவே, திமுக ஆட்சி அமைந்ததும் முடங்கிப்போயுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சீரமைக்க முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்படும் என அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக தமிழ்நாடு அரசு, இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, நெருக்கடிச் சூழலில் சிக்கியுள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர் தேசிய வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடன்களைத் ஏற்க வேண்டுமெனவும், தற்போதையக் கொடுஞ்சூழலைக் கருத்தில்கொண்டு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மீண்டும் புத்தெழுச்சியுடன் சிறப்பாகச் செயல்படப் புதிதாகக் கடன்பெறுவதற்கான வழிவகைகளைச் செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன் என்றுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published:

Tags: Naam Tamilar katchi, Seeman

அடுத்த செய்தி