தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் மின்வெட்டு நிலவி வருகிறது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆலத்தூர், சித்தூர். தொழுதூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஒரு வார காலமாக மணிக்கு ஒருமுறை எவ்வித அறிவிப்பும் இன்றி மின் தடை ஏற்படுவதால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இரவு நேரத்தில் மின் தடை ஏற்படுவதால், கொசுக்கடிக்கு மத்தியில் தூக்கம் இல்லாமல் தவிப்பதாகவும் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியோர் கடுமையாக அவதிப்படுவதாகவும் மக்கள் கூறுகின்றனர். திட்டக்குடி அருகே மணிக்கு ஒருமுறை மின் தடை ஏற்படுவதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நள்ளிரவில் கையில் தீப்பந்தம் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தெருவிளக்கு கம்பங்களிலும் தீப்பந்தங்களை கட்டிவைத்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க இந்தோனேஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. தமிழக அரசு டெண்டர் கோரிய நிலையில் 4 நிறுவனங்கள் விண்ணப்பித்த நிலையில் குறைந்த மதிப்பு காட்டிய இரு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த இரு நிறுவனங்களுடன் அடுத்த 2 மாதங்களுக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட வாய்ப்புள்ளது.
நிலக்கரி இறக்குமதி காரணமாக தமிழகத்தில் நிலவும் கடுமையான மின் பற்றாக்குறை குறையும். தமிழகத்திற்கு தினசரி 72,000 டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில் 50,000 டன் அளவே நிலக்கரி கிடைக்கிறது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாகவே மின்வெட்டு இருப்பதாக மின்சார் வாரியம் தெரிவித்துள்ளது.
Also Read : மின்வெட்டால் திமுக ஆட்சி பறிபோனதை முதல்வர் நன்று அறிவார்: ஓ.பன்னீர்செல்வம்
இதனிடையே திமுக ஆட்சி முடிவடையும் போது கண்டிப்பாக தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு தேவையான மின் உற்பத்தியை நாமே உற்பத்தி செய்யும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர்தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.