அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நிவாரணம் முழுமையாகச் சென்றடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: ”அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் அறிவித்தபடி ஊரடங்கு நிவாரண நிதி மற்றும் உணவுத்தொகுப்பு முழுமையாக சென்றடைவதை தமிழக அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
முதற்கட்ட ஊரடங்கின்போது அறிவித்த ரூ.1000/- மற்றும் உணவுத்தொகுப்பே இன்னும் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு சென்றடையவில்லை என்று தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் இரண்டாவது கட்டமாக அதே போன்ற உதவி வழங்கப்படுமென தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
அதிலும் கூட நலவாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களில் ஏறத்தாழ பாதி பேருக்குத்தான் உணவுத்தொகுப்பு வழங்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கூறியிருப்பதாக வரும் செய்திகள் ஏற்புடையதல்ல.
எனவே, வருமானமின்றி துயரத்தில் இருக்கும் அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் நிதியும், உணவுத்தொகுப்பும் உடனடியாக கிடைப்பதற்கு தமிழக அரசு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.