’விவசாயிகள் பிரச்னைகளை அரசுகள் காது கொடுத்து கேட்பதில்லை’ - திமுக எம்எல்ஏ கீதாஜீவன் குற்றச்சாட்டு

’விவசாயிகள் பிரச்னைகளை அரசுகள் காது கொடுத்து கேட்பதில்லை’ - திமுக எம்எல்ஏ கீதாஜீவன் குற்றச்சாட்டு

திமுக சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன்.

விவசாயிகள் பிரச்னைகளை மத்திய, மாநில அரசுகள் காது கொடுத்து கேட்பதில்லை என்று திமுக எம்எல்ஏ கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
தமிழகத்தில் விவசாயிகளுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னின்று போராடி வெற்றி கண்டவர் நாராயணசாமி நாயுடு. கடந்த 1984ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதியில் தங்கி இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21ம் தேதி நாராயணசாமி நாயுடு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இன்று நாராயணசாமி நாயுடு 36வது நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டி பயணியர் விடுதியில் அவர் திருவுருவபடத்திற்கு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் மலர் தூவி மரியாதை செய்தனர். தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் பயணியர் விடுதி முன்பு இருந்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாகச் சென்று நாரயணசாமி நாயுடு திருவுருவபடத்திற்கு மரியாதை செய்தனர். இதில் திமுக வடக்கு மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன், தமிழ் விவசாயிகள் சங்கத் தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி ஆகியோர் கலந்துகொண்டு நாராயணசாமி திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

பின்னர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், விவசாயிகளுக்காக போராடிய போராளியாக திகழ்ந்தவர் நாராயணசாமி நாயுடு என்று தெரிவித்தார். மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி, விவசாயம் என்ற பெயரை எடுத்தாலே நாராயணசாமி நாயுடு பெயரை உச்சிரிக்காமல் இருந்தது இல்லை என்று கூறிய அவர், நாராயணசாமி நாயுடு போராட்டம் நடத்தியது காரணமாக விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரத் திட்டத்தை கருணாநிதி அறிவித்தார் என்றார்.

Also read: ரொட்டி இயந்திரம், வாஷிங்மெஷின்.. டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் 'பஞ்சாபி ஜுகாத்' வரவழைப்பு..

மேலும் கூறுகையில், விவசாயக் கடன் தள்ளுப்படிக்காக டெல்லியில் தமிழக விவசாயிகள் போராடியபோது மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளைக் கண்டுகொள்ளவில்லை; விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது எடப்படி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு, அந்த வழக்கு தற்பொழுதும் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

எட்டுவழிசாலையை எதிர்த்து மக்கள் பல போராட்டங்களை நடத்தினர். ஆனால் தமிழக அரசு துளியளவுகூட காதில் வாங்கிக் கொள்ளவில்லை. என்றாலும், முதல்வர் தன்னை ஒரு விவசாயி என்கிறார் என்பதாக சாடினார். திமுக ஆட்சியில்தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், 7,000 கோடி கடன் தள்ளுப்படி, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை, உழவர் சந்தை, நுகர்பொருள் வாணிப கட்டடம் என கருணாநிதி கொண்டு வந்தார். விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக திமுக அரசு இருந்தது என்று தெரிவித்தார்.

விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்தியும் அதனை காது கொடுத்து கேட்காத மத்திய, மாநில அரசுகள் உள்ளதாக குற்றம்சாட்டிய கீதாஜீவன், நிச்சயமாக விரைவில் இந்த நிலைமை மாறும் என்றார். பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 வழங்க வேண்டும், அடுத்து திமுக ஆட்சி வந்தவுடன் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தைச் செயல்பட வைப்போம் என்று கூறினார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: