ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆளைக் கொல்லும் ஆன்லைன் சூதாட்டம்... நிரந்தர தடை வருமா? - ஆளுநர் முடிவுக்காக காத்திருக்கும் தமிழகம்!

ஆளைக் கொல்லும் ஆன்லைன் சூதாட்டம்... நிரந்தர தடை வருமா? - ஆளுநர் முடிவுக்காக காத்திருக்கும் தமிழகம்!

ஆளுநர் ஆர்.என்.ரவி - ஆன்லைன் ரம்மி

ஆளுநர் ஆர்.என்.ரவி - ஆன்லைன் ரம்மி

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச்சட்டம் நேற்றுடன் காலாவதியானது. ஆனால் இன்னமும் மசோதாவிற்கான ஒப்புதலை ஆளுநர் அளிக்கவில்லை.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டம் மூலம் இந்தியா முழுவதும் ஒவ்வொரு நாளும் கோடிக் கணக்கான பணம் புழங்குகிறது. சாமானியவர்கள் முதல் படித்தவர்கள் வரை இந்த விளையாட்டுக்கு ஏராளமானோர் அடிமையாகியுள்ளனர். ரம்மி விளையாட்டு பொழுது போக்கிற்காக இருந்தவரை பிரச்னையில்லை. ஆனால் அது எப்போது பணம் வைத்தும் விளையாடும் சூதாட்டமானதோ, அப்போதிலிருந்து தான் பிரச்னையே.

எளிதில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் ஏராளமானோர் பணம் கட்டி ஆன்லைனில் இந்த விளையாட்டை விளையாடுகின்றனர். முதலில் ஜெயிப்பது போல் தெரிந்தாலும், கடைசியில் கணக்குப் பார்த்தால் நாம் வென்றதற்கும் மேல் தோற்றிருப்போம். ஆனால் விட்டதை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்கிற வெறி தலைக்கேற, கடன் வாங்கியும், வீட்டில் உள்ள நகை உள்ளிட்ட பொருட்களை அடகு வைத்தும் இந்த விளையாட்டை விளையாடி வருகிறார்கள். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, அதனால் நிம்மதியை இழந்து, குடும்பத்துடன் பலர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவங்கள் தமிழகத்தில் ஏராளம். ஆன்லைன் சூதாட்டத்தால தமிழகத்தில் 17-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

இதையும் படிக்க :  ஆன்லைன் சூதாட்டம்: காலாவதி ஆனது அவசரச் சட்டம்.. ஆளுநரின் அடுத்த மூவ் என்ன?

இந்தியாவில் கிட்டத்தட்ட 130க்கும் மேற்பட்ட ஆன்லைன் விளையாட்டு செயலிகள் செயல்பாட்டில் உள்ளன. இந்த செயலிகளை சர்வதேச கார்ப்பரேட் கம்பெனிகள் நடத்துகின்றன. இந்த செயலிகள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வருமானம் கிடைக்கிறது.  இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே சென்றதால் தமிழக அரசு கடந்த 2020ஆம் ஆண்டு நம்பர் மாதம் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அவசரச் சட்டம் கொண்டு வந்தது.

அதை எதிர்த்து ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணைக்கு வந்த போது, 'ஆன்லைன் ரம்மி என்பது திறமை சார்ந்த விளையாட்டு, சூதாட்டம் அல்ல' என்று உச்ச நீதிமன்றம் பல தருணங்களில் தீர்ப்பளித்துள்ளது. சட்ட ஆணையமும் இதே கருத்தைத்தான் தெரிவித்திருக்கிறது. எனவே, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளைத் தடை செய்யமுடியாது. முறைப்படுத்துவதற்கு மட்டுமே முடியும்" என்று கூறி ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என தீர்ப்பளித்தது. தமிழக அரசும் ஆன்லைன் சூதாட்டத் தடைச்சட்டம் செல்லாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.

இதனிடையே ஜூன் 10-ம் தேதி, ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பது தொடர்பாக முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலைகள் உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இவ்விளையாட்டுக்களால் ஏற்படக்கூடியப் பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இவ்விளையாட்டுக்களை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை ஆய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும் அரசுக்கு உரிய ஆலோசனைகள் வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்தது தமிழக அரசு.

நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என அழுத்தமாக பரிந்துரைத்திருந்தது. இதையடுத்து கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டத்தை கொண்டு வந்தது தமிழக அரசு. அதன் பிறகு ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்யும் நிரந்தர சட்டத்திற்கான மசோதா கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச்சட்டம் நேற்றுடன் காலாவதியானது.

அவசரச்சட்டம் காலாவதியாவதற்குள் ஆன்லைன் தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துவிடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த மசோதாவில் சில சந்தேகங்களை எழுப்பியிருந்தார். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தண்டனை விதிப்பது குறித்த அதிகாரம், அளவீடு குறித்து விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுத, தமிழ்நாடு அரசின் சட்டத்துறையும் உரிய விளக்கத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறது. ஆனால் இன்னமும் மசோதாவிற்கான ஒப்புதலை ஆளுநர் அளிக்கவில்லை. மசோதா தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக தமிழக சட்டத்துறை தயாராக இருப்பதாகவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசரச்சட்ட நேற்றுடன் காலாவதியாகியுள்ளதால், மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்தால் விபரீத சம்பவங்கள் நடைபெறும் அச்சம் எழுந்துள்ளது. அதற்குள் ஆளுநர் முடிவெடுப்பாரா என காத்திருக்கிறது தமிழக அரசு.

First published:

Tags: Online rummy, RN Ravi, TN Govt