சென்னை மெட்ரோ ரயிலில் நாள்தோறும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்களிடம் மெட்ரோ ரயில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெரிவிக்கையில், மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வார இறுதி நாட்களின் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில் தற்போது கணிசமாக அதுவும் உயர்ந்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் நாள் ஒன்றுக்கு 81,000 பயணிகள் மட்டுமே பயணித்து வந்தனர். பிப்ரவரி மாதத்தில் 1.13 லட்சம் பேரும், ஏப்ரல் மாதத்தில் 1.51 லட்சம் பேரும், மே மாதத்தில் 1.59 லட்சம் பேரும் பயணித்துள்ளனர். பொதுவாக வார விடுமுறை நாட்களில் ஒரு லட்சத்திற்கும் குறைவான பயணிகள் வருகை தந்த நிலையில் தற்போது 1.3 லட்சம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து வருகிறார்கள்.
Also Read : அநீதியை அழிக்க பெருமாளின் பேரன் அவதாரமாக வந்துள்ளேன்.. சீமான் பேச்சு
மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக மாநகர் போக்குவரத்து கழகத்துடன் இணைந்து சென்னை மெட்ரே ரயில் நிறுவனம் ஏற்கனவே 6 வழித்தடங்களில் 12 சிற்றுந்துகளை இயக்கி வருகிறது. இதனை விரிவுப்படுத்தும் விதமாக மேலும் 5 வழித்தடங்களில் 10 சிற்றுந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி அரசினர் தோட்டம் மெட்ரோ முதல் தலைமை செயலகம், கிண்டி மெட்ரோ முதல் வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம், சின்னமலை மெட்ரோ முதல் தரமணி, செனாய் நகர் மெட்ரோ முதல் தி.நகர் பேருந்து நிலையம், விமானம் நிலையம் மெட்ரோ முதல் தாம்பரம் மேற்கு ஆகிய 5 வழித்தடங்களில் தலா 2 சிற்றுந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதேப்போன்று மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மாநகர் போக்குவரத்து கழக இணைப்பு சிற்றுந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.