HOME»NEWS»TAMIL-NADU»gold treasure found in ancient temple in uthiramerur kanchipuram vai
உத்திரமேரூரில் உள்ள பழங்கால கோயிலில் தங்க புதையல் கண்டெடுப்பு... வருவாய்துறை, காவல்துறை விசாரணை
500 ஆண்டு கால பழமையான குழம்பேஸ்வரர் கோயிலில் உத்திரமேரூர் நகர மக்கள் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக திருப்பணி மேற்கொண்டனர். திருக்கோயிலை புனரமைக்கும் பொழுது குவியல் குவியலாக தங்கம் கிடைத்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் குழம்பேஸ்வரர் கோவில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் உள்ள இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த, கோவில் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். இந்நிலையில் கோவில் கருவறையின் நுழைவுவாயிலின் முன் உள்ள கருங்கற்களாலான படிக்கட்டுகளை திருப்பணிக் குழுவினர் அகற்றினர். அப்போது அதன் கீழ் துணியால் சுற்றப்பட்ட சிறிய அளவிலான மூட்டை இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது ஏராளமான தங்க ஆபரணங்கள் இருந்தன. மேலும் வருவாய்த்துறை அனுமதி இல்லாமல் 500 ஆண்டு கால பழமையான கோவிலை முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர்.
அப்பொழுது கோவிலில் படிக்கட்டை ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு பெயர்க்கும் பொழுது குவியல் குவியலாக தங்கம் கிடைத்ததாக வருவாய் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கிடைக்கப்பெற்ற தங்கத்தை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்வதற்காக கோவில் அமைந்துள்ள பகுதிக்கு செல்லும் பொழுது அப்பகுதி மக்களுக்கும் வருவாய் துறைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் புதையலாக கிடைத்த பழங்காலத்து தங்கத்தை அப்பகுதி பொதுமக்கள் சிலர் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கடந்த 16 ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் தங்கம் பயன்பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அன்னியர்கள் படையெடுப்பு காரணமாக அக்காலத்தில் வாழ்ந்த முன்னோர்கள் போர் பதற்றத்தின் அச்சுறுத்தல் காரணமாகவே சாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட நகைகளை இந்த கோவிலின் பல்வேறு பகுதிகளில் புதைத்து வைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தற்போது கண்டெடுக்கப்பட்ட நகைகள் யாவும் சுவாமி சிலைகளுக்கு திரு ஆபரணங்களாக சாத்தப்படும் நகைகள் என நம்பப்படுகிறது. மேலும் அம்பாள் காணவில்லை. பல அரிய தெய்வ சிலைகள் எல்லாம் தற்போது காணவில்லை என்று கூறுகிறார்கள் ஊர்மக்கள். தற்போது பொதுமக்களால் கையகப்படுத்தப்பட்ட தங்க நகைகளின் மதிப்பீடு குறித்து வருவாய்த் துறையும் காவல் துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.