தங்கத்தை விழுங்கி வயிற்றிலும், ஆசனவாயிலும் கடத்திவந்த பெண்கள்.. 8 நாள் ட்ரீட்மெண்ட்டில் மீட்டெடுத்த அதிகாரிகள்

Youtube Video

தங்கப் பசையை மாத்திரையாக உருட்டி, அவற்றின் மேல் பாலித்தீன் கவரைச் சுற்றி வாயில் போட்டு விழுங்கி கடத்தி வந்துள்ளனர் குருவிகள். தங்க மாத்திரைகள் கடத்தப்பட்டது அம்பலமானது எப்படி?

 • Share this:
  அயன் திரைப்படத்தில் கதாநாயகன் சூர்யா, வைரக் கற்களை நுாதன முறையில் கடத்தி வரும் காட்சிகள் சித்திரிக்கப்பட்டிருக்கும். அதேபோல ஒரு சம்பவம் சென்னை விமான நிலையத்தில் நடந்துள்ளது. 

  துபாய் மற்றும் ஷார்ஜாவில் இருந்து விமானங்களில் வரும் பயணிகள் தங்கக் கடத்தலில் ஈடுபடுவதாக சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.  அதன்படி ஜனவரி 22ம் தேதி துபாய் மற்றும் ஷார்ஜாவில் இருந்து வந்த விமானங்களில் பயணித்த பயணிகளை சோதனையிட்டனர்.

  அவர்களில் திருச்சியைச் சேர்ந்த 56 வயதான கனகவல்லி, 30 வயதான நிஷாந்தி, 53 வயதான கலா பிரதீப் குமார், 55 வயதான ஜெயராஜ், புதுக்கோட்டையைச் சேர்ந்த 37 வயதான ஜெகதீஷ், 52 வயதான கபார்கான், ராமநாதபுரத்தைச் சேர்ந்த 25 வயதான முகமது ஹக்கீம், 34 வயதான தஸ்லீம் பாத்திமா ஆகியோர் சிக்கினர்.

  இவர்களிடம் நடத்திய விசாரணையில் தங்கக் கடத்தல் குருவிகளாக செயல்பட்டதாக ஒப்புக் கொண்டனர். தொடர் விசாரணையில், 2 பவுன் முதல் 3 பவுன் வரையிலான தங்கப் பசையை சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி அவற்றின் மீது பாலித்தின் பேப்பர் அல்லது ரப்பரைச் சுற்றி மாத்திரை போல விழுங்கி விடுவார்கள்.

  அந்த தங்க மாத்திரைகள் வயிற்றில் சென்று பெருங்குடலில் நின்று கொள்ளும். வீட்டிற்கு வந்த உடன் வாழைப்பழம் உள்ளிட்டவற்றை உண்டு அவற்றை வெளியில் எடுத்து விடுவார்கள். இதைக் கண்டுபிடித்த அதிகாரிகள், தங்கம் கடத்தி வந்த அனைவரையும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 8 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு 4 கிலோ எடையுள்ள தங்க மாத்திரைகள் மீட்கப்பட்டன. மொத்தம் நான்கு கிலோ 15 கிராம் எடையுள்ள, 2 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க மாத்திரைகள், செயின், மோதிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன..

  இதுபோன்று தங்க மாத்திரைகள் வடிவில் தங்கப் பசையை உருட்டி வயிற்றில் வைத்து கடத்தி வருவது இதுவே முதன்முறை என்கின்றனர் சென்னை விமான நிலைய அதிகாரிகள். தொடர்ந்து தங்கம் கடத்தி வரும் குருவிகள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளனர்.
  First published: